நாடாளுமன்றில் டிரான் அலஸுடன் சஜித் அணி கடும் வாக்குவாதம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கத் தவறியதைத் தொடர்ந்தே இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றம் சாட்டினார்.

“ஜனாதிபதி ஆணைக்குழு, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறித்து தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் பரிந்துரைத்திருந்தது” – என்று ஹெக்டர் அப்புஹாமி எம்.பி. தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையில் நிலந்த ஜயவர்தனவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார்.

“நிலந்த ஜயவர்தனவை விசாரணை செய்தால் அவருடன் சேர்ந்த பலர் சிக்குவார்கள். அதனால்தான் அரசு, நிலந்த ஜயவர்தனவை விசாரணைக்கு உட்படுத்த அஞ்சுகின்றது” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.