ஆந்திராவின் தலைநகரம் இனி விசாகப்பட்டினம்.. – எப்போது முதல் தெரியுமா?

ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு அதன் தலைநகரமாக ஐதராபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதியை தலைநகரமாக மாற்ற அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.

பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் அதனைத் திரும்பப்பெற்றுக் கொண்டார். அதன்படி தற்போது அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வருகிறது.

அதன் பின்னர், விசாகப்பட்டினத்தை தலைநகராக மாற்றவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறி வந்தார். அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்றுவந்தன. ஆனால் எப்போது தலைநகரமாகும் என தேதி தெரிவிக்கப்படாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று , (செப் 20) ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்,

முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் நடப்பாண்டு அக்டோபர் மாதம் தசரா விழாக்கள் தொடங்கும் நேரத்தில் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் எனவும் விசாகப்பட்டினம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.