ஒடுக்கப்படுகின்றது இலங்கையின் ஜனநாயகம்! – செல்வம் எம்.பி. ஆதங்கம்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பில் பேசிக்கொண்டு, நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வருவது எந்த வகையில் நியாயமானதாக அமையும்.?”

இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. வர்த்தமானியில் பார்க்கும் போது இரண்டும் ஒன்றாகவே தெரிகின்றது. சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் போராடுவதை நிறுத்துவதற்கான செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனை தமிழ், சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர். மீண்டும் அடக்குமுறைகளை கொண்டு வரும் சட்டமாகவே இது அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்குள் இருக்கும் நேரத்தில் ஜனநாயக மரபுகளை ஒழிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இவ்வாறான நிலைமை இங்கே இருக்கக் கூடாது என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாகப் பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை அடக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும்.? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஐ.நா. கூறுகின்றது. ஆனால், அரசோ அதனை நீக்கி அதற்கு இணையான சட்டத்தைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றது.

யுத்தம் இல்லாத தற்போதைய நிலைமையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமானது அல்ல. இதனால் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

திருகோணமலையில் எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவர் ஜனநாயகப் போராட்டத்திலேயே ஈடுபட்டார். திலீபனும் ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதம் இருந்தே மரணித்தார். இவ்வாறான நிலைமையில் குறித்த தாக்குதல் சம்பவங்கள் இன முறுகல்களை ஏற்படுத்தும். ஜனநாயக ரீதியிலான விடயங்களுக்கு இடமளிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.