தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்க யாழ். நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை பிறப்பித்தது.

திலீபனின் நினைவேந்தலைத் தடை செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை (19) மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவைத் தள்ளுபடி செய்து மறுநாள் புதன்கிழமை (20) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று கொழும்பிலிருந்து ஹெலியில் வந்து யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதில், தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவேந்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

அத்துடன், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து வீடியோ படம் பிடித்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசி பறிக்கப்பட்டு, காட்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை நீதிவானுக்கு அவர்கள் திரையிட்டு காண்பித்தனர்.

“இந்தச் சம்பவத்துக்கு எதற்காக நினைவேந்தலைத் தடை விதிக்க வேண்டும்? அதற்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா?” – என்று நீதிவான் வினவியபோது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறை பரவலைத் தடுக்க திலீபனின் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் கோரினர்.

எனினும், இன்று மதியம் 1.30 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய பொலிஸாரின் இரண்டாவது மனுவையும் தள்ளுபடி செய்து நினைவேந்தலைத் தடை விதிக்க முடியாது என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்து அறிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.