சீக்கியச் சமயத் தலைவர் கொலை விவகாரம்: “புலானாய்வுத் தகவல்கள் இந்தியாவுடன் பகிரப்பட்டன” – கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடியச் சீக்கியச் சமயத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்ட சம்பவத்தின் புலனாய்வுத் தகவல்களை இந்தியாவுடன் பல வாரங்களுக்கு முன்பே பகிர்ந்ததாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார்.

கொலையைப் பற்றிய எந்தக் குறிப்பிட்ட தகவலையும் ஒட்டாவா (Ottawa) பகிர்ந்துகொள்ளவில்லை என்று புதுடில்லி கூறியிருந்ததற்குத் திரு ட்ரூடோ பதிலளித்தார்.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசதந்திர நெருக்கடி ஒரு வாரமாக நீடிக்கிறது.

நம்பத்தகுந்த ஆதாரங்கள் எனக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த தகவல்களைப் பல வாரங்களுக்கு முன்பாகவே இந்தியாவுடன் பகிர்ந்ததாகத் திரு ட்ரூடோ சொன்னார்.

இந்தியாவுடன் ஆக்ககரமான வழியில் பணியாற்ற விரும்புவதாகவும் அதற்கு இந்தியா ஒத்துழைக்குமென்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

இந்நிலையில் அமெரிக்கா கனடாவுடனும் இந்தியாவுடனும் தொடர்பில் இருப்பதாகச் சொன்னது.

புலனாய்வில் ஒத்துழைக்கும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) இந்தியாவைக் கேட்டுக்கொண்டார்.

ஆலோசனை மட்டுமின்றி கனடிய சக ஊழியர்களுடன் இணைந்து இந்த விவகாரத்தில் ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் கனடிய அதிகாரிகள் புலனாய்வைத் தொடர்வது முக்கியம் என்று திரு பிளிங்கன் கூறினார்.

அதில் இந்தியா ஒத்துழைப்பது அவசியம் என்றார் அவர்.

கனடியப் புலனாய்வு அமைப்புகளின் கண்டுபிடிப்புகள் வெளிப்படையாக இன்னும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.