சு.கவை அரசுடன் முழுமையாக இணைக்கத் திரைமறைவில் தீவிர முயற்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முழுமையாக அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கை திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது எனத் தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகரவை சு.கவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் உள்ளதாவது:-

அரசில் இணைந்து செயற்படுகின்ற சு.க. உறுப்பினர்களே சு.கவை முழுமையாக அரசுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சு.க. அரசில் இணைவதற்குத் தயாசிறி முழுமையாகத் தடையாக இருந்தமையாலேயே அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று சு.க.. வட்டாரம் கூறுகின்றது.

அரசில் இணைந்துள்ள சு.க. உறுப்பினர்கள் மீண்டும் சு.கவில் இணைவதாக இருந்தால் அரசில் இருந்து விலகி வர வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார் தயாசிறி. அவர்களோ முழு சு.கவையும் அரசுடன் இணைக்கும் முயற்சியில் இருக்கும்போது அரசை விட்டு எப்படி விலகுவர்? மைத்திரிபால ஆரம்பத்தில் தயாசிறியின் மேற்படி நிலைப்பாட்டில்தான் இருந்தார். பின்னர் மாறிவிட்டார். அதற்குக் காரணம் அரசுடன் உள்ள சு.க. உறுப்பினர்கள் மைத்திரியைச் சந்தித்து மேற்கொண்ட மூளைச்சலவைதான் என்று சொல்லப்படுகின்றது.

அவர்களின் அழுத்தம் காரணமாகவே தயாசிறியும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மைத்திரியால் நீக்கப்பாட்டார். – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.