ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க ரணில் முயற்சிக்கவேமாட்டார்! – ஐ.தே.க. உறுதி.

“ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார். எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தில் சந்தேகப்படத் தேவையில்லை.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடமளிக்க வேண்டும். அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்கக்கூடாது’ – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதே வஜிர அபேவர்த்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக சுயாதீன விசாரணைகள் இடம்பெறும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும். தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.