ஐ.எம்.எப். பிரதிநிதிகள் – சஜித் சந்திப்பு! (Photos)

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலின் முதலாவது மீளாய்வின் இறுதிக் கலந்துரையாடலின் நிமிர்த்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பொருளாதார, சமூக,
அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அரசு உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய மிகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐ.எம்.எப். பிரதிநிதிகளிடம் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், ,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்குச் சாதகமான உடன்பாட்டை மேற்கொண்டு அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என்றும் சஜித் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம்,பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், எம்.வேலுகுமார் மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.