மேற்கு ஆபிரிக்காவில் சூழும் போர் மேகம் எதற்காக? – சண் தவராஜா

மத்திய ஆபிரிக்க நாடுகள் மூன்று இணைந்து தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளன. இராணுவ ஆட்சியின் கீழ் உள்ள மாலி, புர்க்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய இந்த மூன்று நாடுகளும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் குடியேற்ற நாடுகள் ஆகும்.

அண்மையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நைஜர் மீது மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக அமைப்பு (ECOWAS) போர் மூலம் இராணுவ ஆட்சியை அகற்றப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தப் புதிய ஒப்பந்தம் உருவாகி உள்ளது. முன்னதாக மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக அமைப்பு நைஜர் மீது தாக்குதல் தொடுத்தால், நைஜர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மாலி மற்றும் புர்க்கினா பாசோ ஆகிய நாடுகளின் இராணுவங்களும் களம் இறங்கும் என ஏனைய இரு நாடுகளும் அறிவித்திருந்த நிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

‘சாஹெல் நாடுகளின் கூட்;டமைப்பு’ என்ற பெயரிலான இந்த உடன்படிக்கை உள்நாட்டுக் கிளர்ச்சி மற்றும் வெளி ஆக்கிரமிப்பு என்பவற்றின் போது ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என்ற அடிப்படையிலானது என இது தொடர்பான தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ள மாலி இராணுவத் தலைவர் அசிமி கொய்ற்றா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியத் தீவரவாதிகளின் அபாயத்தை எதிர்கொண்டு அதற்கு எதிராகப் போராடிவரும் இந்த நாடுகளில் இராணுவ ஆட்சி உருவாகியதன் பின்னணியில் அவை மேற்குலகின் பலத்த கண்டனத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக நைஜரில் புதிதாகப் பதவியேற்றுள்ள இராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. அதேவேளை, நைஜர் மீது மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக அமைப்பை படையெடுக்குமாறு பிரான்ஸ் அரசாங்கமே தூண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘இந்தக் கூட்டமைப்பு மூன்று நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பொருண்மிய நோக்கங்களுக்கானது. மூன்று நாடுகளிலும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதே இதன் முக்கிய நோக்கம்” என்கிறார் மாலியின் பாதுகாப்பு அமைச்சர் Abdoulaye Diop.

“ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள ஏதாவது ஒரு நாட்டின்; இறைமை மீதோ பிரதேச சுயாதிபத்தியம் மீதோ தாக்குதல் நடத்தப்படுமானால் அது அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஏனைய நாடுகள் தனித்தோ கூட்டாகவே மற்றைய நாட்டுக்கு உதவும்” என்கிறது ஒப்பந்தத்தின் விதி.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக அமைப்பு நைஜர் மீது படையெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மூன்று நாடுகள் இணைந்து இராணுவ உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளமை உண்மையில் அந்தப் பிராந்தியத்தில் போர் ஒன்று எதிர்பார்க்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் எச்சரிக்கை வெளியாகிப் பல வாரங்கள் ஆகிய பின்னரும் கூட இதுவரை படை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான முன்னாயத்தங்கள் கூட எதுவம் நிகழ்ந்ததாகவும் தெரியவில்லை. அது மாத்திரமன்றி இத்தகைய படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுப்பு நாடுகள் சில வரவேற்கவும் இல்லை. அத்தோடு இவ்வாறான ஒரு படை நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் தேவையான சட்ட வரைமுறைகள் கூட சில உறுப்பு நாடுகளிடம் இல்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

இருந்தும், திடுதிப்பென மூன்று நாடுகளின் இராணுவக் கூட்டு பற்றிய செய்தி வெளியாகியுள்ளமை நைஜர் மீதான படையெடுப்யை அவை உண்மையிலேயே எதிர்பார்க்கின்றனவா அல்லது அத்தகைய ஒரு படையெடுப்புக்கான ஆதரவு நிலைப்பாட்டை உறுப்பு நாடுகள் ஒருமித்து எடுப்பதற்கு தடையாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
காரணம் எதுவாக இருந்தாலும் போர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அமைதியை, சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களினதும் தெரிவாக உள்ளது. ஆனால், போர்கள் திணிக்கப்படும் வேளைகளில் போரிட்டே ஆக வேண்டும் என்பதுவும் இயல்பானதே.

அமைதியை விரும்பும் உலகில் இன்றும் ஆங்காங்கே போர்கள் நடைபெற்ற வண்ணமேயே உள்ளன. அத்தகைய போர்கள் எதனால் உருவாகின? யார் நேரடியாகப் போர்களை நடத்துகின்றனர்? யார் பின்னணியில் இருந்து இயக்குகின்றனர்? போர்களை முடிவுக்குக் கொண்டுவர யார் இதய சுத்தியுடன் செயற்படுகின்றனர்? யார் அத்தகைய முயற்சிகளுக்குத் தடையாக இருக்கின்றனர்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகள் எப்போதுமே மாறுபாடானவையாகவே உள்ளன. அவரவர் அரசியல் மற்றும் சார்புநிலை சார்ந்தே இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெளிவரும். இதில் உண்மை எது பொய் எது என்பது கூடப் பொதுமக்களைப் பொறுத்தவரை தெளிவில்லாத விடயமே.

மேற்கு ஆபிரிக்காவில் உண்மையிலேயே போர் நடைபெறப் போகின்றதா என்பதைக் கூட சம்பந்தப்பட்ட நாடுகள் தீர்மானிக்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இத்தகைய முடிவுகள் பெரும்பாலும் பலம்மிக்க வல்லரசு வகையிலான நாடுகளினாலேயே முடிவு செய்யப்படுகின்றன.

ஆனால், போர் ஒன்று நடைபெறுமானால் பாதிக்கப்படப் போவது சொந்த நாட்டு மக்களே. அபரிமிதமான இயற்கை வளங்களைக் கொண்டிருந்தும் ஆபிரிக்க நாடுகளில் பெரும்பாலான மக்கள் இன்னமும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதற்கே நிர்ப்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல. அவ்வாறு வாழும் மக்கள் மீது போர்கள் திணிக்கப்படுமானால் அவர்களின் வறுமை நிலை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

ஆனால், தமது குடியேற்றவாதக் கொள்கைகளில் இருந்து இன்னமும் விடுபட்டிராத முன்னாள் எசமானர்கள் நினைத்துவிட்டால் போர்கள் உருவாகுவதைத் தடுத்துவிடுவது கடினம். சாஹெல் பிராந்தியத்தைப் பொறுத்தவரை அங்குள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு ஆட்சியாளர்கள் தடையாக விளங்குவார்கள் என்ற முடிவுக்கு முன்னாள் குடியேற்ற எசமானர்கள் வந்துவிட்டால் எந்த வழியிலாவது போரைத் திணித்து விடுவார்கள் என்பதற்கு வரலாறு முழுவதிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன போன்ற அலங்காரச் சொல்லாடல்களை முன்னிறுத்தி இத்தகைய போர்களை நடத்தக் கூடிய வல்லமை அத்தகைய நாடுகளிடம் தேவைக்கு அதிகமாகவே உண்டு.

Leave A Reply

Your email address will not be published.