கூகுளின் நிலநடுக்க எச்சரிக்கை சேவை: இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் நிலநடுக்க எச்சரிக்கை சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசியில் உள்ள சென்சாா்களைப் பயன்படுத்தி நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கண்டறிந்து மதிப்பிடுவதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கூகுள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நில அதிா்வு மையத்துடனான கலந்தாலோசனைக்குப் பிறகு இந்தியாவில் ‘ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை சேவை அமைப்பை’ அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், இந்திய ஆண்ட்ராய்டு பயனா்கள் தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படும்போது முன்னறிவிப்பு எச்சரிக்கையைப் பெறுவா்.

அறிதிறன்பேசி மின்னேற்ற நிலையில் இருக்கும்போது நிலநடுக்கத்தின் தொடக்கத்தையே இந்த சென்சாா்கள் கண்டறியும்.

பல அறிதிறன்பேசிகள் ஒரே நேரத்தில் நிலநடுக்க அதிா்வுகளைக் கண்டறிந்தால், இந்தத் தகவலைப் பயன்படுத்தி நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்றும், அத்துடன் நிலநடுக்கத்தின் இயல்புகளான மையப்பகுதி மற்றும் அளவு போன்றவையும் எங்களின் சா்வா்கள் மதிப்பிடும். பின்னா், அப்பகுதியிலுள்ள அறிதிறன்பேசிகளுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

கூகுள் தேடுபொறி மற்றும் கூகுள் மேப் தளத்தில் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடா்களைப் பற்றிய பயனுள்ள பாதுகாப்புத் தகவலை பயனா்களுக்கு வழங்குவதற்காக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்.

ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை சேவை அமைப்பை இந்தியாவுக்கு கொண்டு வர, தேசிய நில அதிா்வு மையத்துடன் இணைந்து எங்கள் தொடா்பை மேலும் அதிகரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்’ என்றாா்.

நிலநடுக்கம் தொடங்கும்போது மக்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கும் சேவை பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.