கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ்…இன்ஸ்டாகிராம் ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு..!

19 வயது கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து அருவருக்கத்தக்க ஆபாச மெசேஜ் அனுப்பும் இன்ஸ்டாகிராம் மர்ம ஆசாமி.. போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பயின்று வரும் 19 வயது மாணவி ஒருவர் தன்னுடைய செல்போனில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு ஒரு புது இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து சில மெசேஜ்கள் வந்துள்ளது. முதலில் யார் என்று தெரியாமல் பேச தொடங்கிய மாணவி, பின்னர் அந்த மர்ம நபரின் மெசேஜுகளுக்கு பதில் அளிக்க தொடங்கியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளனர். இதில் மாணவி தனிப்பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் பகிர்ந்திருக்கிறார். இப்படி இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டிருக்க திடீரென ஒரு நாள் அந்த மர்ம நபர்அந்த மாணவி பற்றியும், அவரது குடும்பத்தாரை பற்றியும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விவரித்து அனுப்பியுள்ளார்.

மேலும் உன்னுடைய புகைப்படம் என்னிடம் உள்ளது, நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களிலும், உன்னுடைய நண்பர்களுக்கும் அனுப்பி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கடந்த இரண்டு நாட்களாகவே பல்வேறு மெசேஜ்களை இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபர் கல்லூரி மாணவிக்கு அனுப்பி வந்துள்ளார். இதனால் அவர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இந்த மிரட்டல் மீண்டும் மீண்டும் தொடரவே, அந்த மாணவி சைபர் க்ரைம் காவல் நிலையம் வந்து தனக்கு வரும் ஆபாச மிரட்டல் குறித்து புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து அந்த மர்ம ஆசாமி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் கீர்த்தி கூறுகையில், ‘இந்த வருடத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இணைய வழியில் இது போன்று பெண்களை வாட்ஸ் அப், டெலிகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் மூலமாக மிரட்டுவதோ, அவர்களுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து போடுவதோ இது போன்று எந்த செயல்களை இணைய வழி மூலம் செய்தாலும் எங்களுக்கு இருக்கின்ற நவீன கருவிகளின் உதவியுடன் கட்டாயம் அவர்கள் கண்டுபிடித்து கைது செய்யப்படுவார்கள்.

பெரும்பாலானோர் இணையவழியில் குற்றம் செய்துவிட்டு தப்பித்து விடலாம், நம்மை கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறார்கள் 100% இணைய வழியில் நடக்கின்ற குற்றங்களை அனைத்தையும் கண்டுபிடிக்க முடியும்..ஆகவே இதை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என இளைஞர்களுக்கும் பொது மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.