இஸ்ரேலின் ‘இரும்புக் கூரை’ ஹமாஸிடம் தோற்றுவிட்டதா…

ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசம் தான் அயர்ன் டோம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும். அக்டோபர் 7 அன்று, வான், தரை மற்றும் கடல் வழியாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை உள்ளடக்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவின் பேரழிவு தாக்குதல் நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

தாக்குதலின் முதல் ஒரு மணிநேரத்தில், ஆபரேஷன் ‘அல்-அக்ஸா ஃப்ளட்’ (Al-Aqsa Flood) என்று அழைக்கப்படும் தாக்குதலில் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஹமாஸ் ஆயுதக் குழு ஏவியது. இதற்கு பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் அரசு மாபெரும் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது. ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேலின் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் அயர்ன் டோம் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு கவசம் தாக்குதலின் தொடக்கத்திலேயே – ஹமாஸின் ஏவுகணைகளால் சிதைக்கப்பட்டதா என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வி. அயர்ன் டோம் ஒரே நேரத்தில் பல அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டது.
அதன் வெற்றி விகிதம் 90% வரை இருக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால் வெளியாகும் படங்கள் மற்றும் காணொளிகளில் உள்ள காட்சிகளைக் காணும் போது, ஹமாஸின் ஆரம்ப தாக்குதலின் தீவிரம் அந்த அமைப்பை முறியடித்துவிட்டது என்பது தெரியவருகிறது.

ஹமாஸ் நடத்திய முந்தைய குண்டுவெடிப்புகள் அயர்ன் டோம் மூலம் ஓரளவு தணிக்கப்பட்டன. ஆனால் கடந்த சனிக்கிழமையன்று (07.10.2023) இந்த அமைப்பினால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதலின் தொடக்கத்தில், ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வேகமாக அடுத்தடுத்து ஏவமுடிந்தது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) கூற்றுப்படி, தாக்குதலின் முதல் ஒரு மணிநேரத்தில் ஹமாஸ் 3,200 ஏவுகணைகளை ஏவியது.

இது பாதுகாப்பு அமைப்பின் எதிர்ப்பு ஏவுகணைகள் கையாளக்கூடியதை விட மிக அதிகம். ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு கவச அமைப்பைப் பற்றி வெளிப்படையாக ஆய்வு செய்தது வைத்திருந்ததாக சில பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகின்றனர்.
இதேவேளை ஹமாஸ் தாக்குதலின் போது அயர்ன் டோம் சரியாகச் செயல்படாமல் போவது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.