அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு உறுதி! – அமைச்சர் சுசில் நம்பிக்கை.

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உண்டு.”

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதி மீதும், அரசு மீதும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றார்கள். ஆனால், அவர்கள் தீர்வுகளைக் காண்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படப் பின்னடிக்கின்றார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அரசு முன்வைத்த பின்னர் அரசுக்கு ஆதரவு வழங்குவோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் நிபந்தனையை முன்வைக்கின்றார்கள். தீர்வுகள் கிடைத்த பின் ஆதரவு எதற்கு? ஆதரவை வழங்கி அரசுடன் இணைந்து பயணித்தால்தானே தீர்வுகளை வென்றெடுக்க முடியும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உண்டு. நாம் வாயால் சொல்வது செயலில் நடப்பது கடினம்தான். எனினும், இந்த விவகாரத்தில் ஜனாதிபதியும் அரச தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்தால் அது மேலும் பலமாக இருக்கும்; தீர்வுகளை நாம் விரைந்து வென்றெடுக்க முடியும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.