மறைந்தார் பங்காரு அடிகளார்.. பிரதமர் மோடி இரங்கல்!

மறைந்த பங்காரு அடிகளாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் மறைந்த செய்தி அறிந்த அவரது பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சக்தி பீடத்தின் அருகில் இன்று மாலை 5.30 மணிக்கு பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி, காலை 9 மணி முதல் பொதுமக்கள் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து பங்காரு அடிகளாரின் உடலை காண விரைந்துள்ளனர்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால், அம்மா என்று அழைக்கப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தவர்; அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.