இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியை ஏற்றினார் நிதின் கட்கரி!

பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியினை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இன்று (அக்டோபர் 20) ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அம்ரித்ஸர் மாவட்டத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லைப் பகுதியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் 418 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கொடியினை ஏற்றி வைத்த பின்பு நிதின் கட்கரி பேசியதாவது: இது என் வாழ்வின் பொன்னான நாள். அட்டாரி – வாகா எல்லைப் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். இந்த இடம் உங்களுக்கு இந்திய நாட்டுப் பற்றை ஊட்டக்கூடியது. சுரங்கப் பாதைகள், சாலைகள், மேம்பாலங்கள் என எவ்வளவோ பணிகளைச் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் விட இந்த தேசியக் கொடியினை அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடகாவின் பெலகாவியில் அமைக்கப்பட்டிருந்த 361 அடி உயர தேசியக் கொடியே இந்தியாவின் உயரமான தேசியக் கொடி என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

இந்திய தேசியக் கொடியானது நாட்டின் மதநல்லிணக்கத்தையும், இந்தியாவின் பெருமைகளையும் எடுத்தியம்பும் விதத்தில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.