ஹமாஸ், இஸ்‌ரேலைத் தாக்கியது ஏன் ? – 01

அக்டோபர் 7-ம் தேதி நடத்தியது மிகக் கொடூரமானது.

ராணுவ நிலைகளைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து அப்பாவி பொதுமக்கள் பலரைக் கொன்றனர். ஹிட்லர் கால ஜெர்மனியில் யூதர்கள்மீது நாஜிக்கள் நடத்திய தாக்குதலுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடூரம்

உலக வரைபடத்தில் இஸ்‌ரேல் எங்கே இருக்கிறது என்பது தெரியாதவர்களுக்குக்கூட, இஸ்‌ரேல் வலிமையான ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு என்பது தெரியும். இஸ்‌ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பது தெரியும். இஸ்‌ரேலை யாராவது தாக்கினால், அவர்களுக்குப் பேரழிவு காத்திருக்கிறது என்பது தெரியும்.

எங்கோ தொலைவில் இருக்கும் நமக்கே இதன் விளைவுகள் தெரியும்போது, இஸ்ரேல் ராணுவத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக மோதிக்கொண்டிருக்கும் ஹமாஸ் அமைப்புக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ஹமாஸ் ஏன் இப்படி ஒரு தாக்குதலைத் தொடுத்தது?

யூதர்களுக்கு சனிக்கிழமை ‘சபாத் தினம்’. தங்கள் மத நம்பிக்கைகள்படி அன்று அவர்கள் வேலை செய்யாமல் ஓய்வெடுப்பார்கள். இப்படி ஒரு ஓய்வுநாளான அக்டோபர் 7-ம் தேதியை தெற்கு இஸ்‌ரேல் மீதான தாக்குதலுக்கான நாளாகத் தேர்வு செய்தது ஹமாஸ். அரபு நாடுகள் பலவும் கூட்டணி அமைத்தோ, தனியாகவோ இஸ்‌ரேலுடன் சண்டை போட்டிருக்கின்றன. ஆனால், இஸ்ரேல்மீது ஒரு தனிப்பட்ட பயங்கரவாத அமைப்பு நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து அதிரடியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

ஹமாஸ்

ஹமாஸ்

இதற்குமுன்பு சின்னச் சின்னதாக ஹமாஸ் பல தாக்குதல்களை இஸ்‌ரேலில் நிகழ்த்தியிருந்தாலும், அக்டோபர் 7-ம் தேதி நடத்தியது மிகக் கொடூரமானது. ராணுவ நிலைகளைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளிலும் நுழைந்து அப்பாவி பொதுமக்கள் பலரைக் கொன்றனர். ஹிட்லர் கால ஜெர்மனியில் யூதர்கள்மீது நாஜிக்கள் நடத்திய தாக்குதலுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடூரம் இது. பல மணி நேரம் வீடுவீடாகத் தேடுதல் வேட்டை நடத்தி பலரையும் கொன்றனர். குழந்தைகளின் கண்ணெதிரே கொல்லப்பட்ட பெற்றோர்கள், இளைஞர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு அவர்களின் பெற்றோரைக் கொன்றது, சில இடங்களில் குழந்தைகள் மற்றும் மூதாட்டிகளைக்கூட விட்டுவைக்காதது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள்.

150 பேரைப் பணயக்கைதிகளாக சிறைபிடித்துக்கொண்டு காஸா திரும்பினர்.
இந்தத் தாக்குதல், காஸா பகுதியில் வசிக்கும் சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்களை பேராபத்தில் தள்ளியிருக்கிறது. எப்போதும் இஸ்‌ரேல் பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாவது இஸ்ரேலின் வழக்கமாக இருந்தது. ஹமாஸ் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக இஸ்ரேலின் பக்கம் நின்று பல நாடுகள் பேசின.

எல்லாவற்றையும் தாண்டி தங்களது ராணுவ வல்லமையால் அரபு நாடுகளை மிரட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இந்தத் தாக்குதல் பெரும் அவமானமாக அமைந்தது. அதனால் உடனடியாக அது போர் முழக்கம் செய்தது. ‘காஸாவில் இருக்கும் பொதுமக்கள் எல்லோரும் 24 மணி நேரத்துக்குள் தெற்கு காஸாவை அடைய வேண்டும். வடக்கு காஸாவில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கப் போகிறோம்’ என்றது. ஆனால், அதற்கு முன்பாகவே காஸா முழுக்க பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களைத் தொடங்கிவிட்டது இஸ்‌ரேல்.

கடந்த இரண்டு வாரங்களாக காஸாவில் நடைபெறும் தாக்குதல்களில் மிக மோசமானது, உலகையே பதைபதைக்க வைத்தது, காஸா நகரில் இருக்கும் அல் அஹ்லி மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உள்பட 400 பேர் இந்தத் தாக்குதலில் இறந்தனர்.

காஸா

காஸா

‘இஸ்‌ரேல் ராணுவத்தின் தாக்குதல்தான் இது’ என்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், ‘காஸா பகுதியில் ஹமாஸ் போலவே செயல்படும் இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்பின் வேலைதான் இது. அவர்கள் இஸ்‌ரேலில் தாக்குதல் நடத்த முயன்றபோது தவறுதலாக மருத்துவமனையில் குண்டு விழுந்திருக்கிறது. நாங்கள் இதைச் செய்யவில்லை’ என்று இஸ்ரேல் மறுத்திருக்கிறது.

இதுபோன்ற தாக்குதல்கள் இனி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் வேதனை. இந்த சந்தர்ப்பத்தைக் காரணமாக வைத்து ஹமாஸ் அமைப்பை வேரோடு அழித்துவிட்டு, காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முனைப்பு காட்டுகிறது இஸ்ரேல். ‘ஹமாஸ் அமைப்பில் ஒருவரையும் மிச்சம் வைக்க மாட்டோம்’ என்று கொந்தளிக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. ஹமாஸ் அமைப்பு இப்படி இஸ்ரேல் ராணுவத்தின் முழுமையான தாக்குதலை இதுவரை சந்தித்தது கிடையாது. பணயக்கைதிகளை வைத்துக்கொண்டும், காஸா பொதுமக்களுடன் கலந்தும் அந்த அமைப்பினர் இஸ்‌ரேல் ராணுவத்தை சமாளிக்கப் பார்க்கக்கூடும். சர்வதேச போர் நியதிகளை இஸ்ரேல் ராணுவமே சர்வசாதாரணமாக மீறும்போது, ஹமாஸ் அமைப்பிடம் அதை எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்தப் போர் ஒருபக்கம் இஸ்‌ரேலில் வாழும் யூதர்கள், காஸா மற்றும் மேற்குக்கரையில் வாழும் பாலஸ்தீனர்கள் என்று பொதுமக்களையே ஆபத்தில் தள்ளியிருக்கிறது.

 

நாடுகளுடனான நேரடிப் போரில் இஸ்‌ரேல் எளிதில் வென்றுவிடும். நவீன தொழில்நுட்பமும் அதிநவீன போர் ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளன. ஆனால், கெரில்லா தாக்குதல் நடத்தும் ஆயுதக்குழுக்களை இஸ்‌ரேல் சமாளிக்க முடியாமல் தடுமாறும் என்பதுதான் கடந்த கால வரலாறு. லெபனான் நாட்டில் இருந்தபடி தங்களுடன் மோதிக்கொண்டிருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் 18 ஆண்டுகளாக ஏதேதோ செய்கிறது. ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பு முன்பைவிட வலிமையாகவே வளர்ந்திருக்கிறது. இப்போதும் அது இஸ்ரேலை தாக்கியபடி இருக்கிறது.

ஹமாஸ் கதையும் இப்படித்தான். சின்னச்சின்ன தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திய அமைப்பு, இப்போது பெரிதாக வளர்ந்திருக்கிறது. அல் கொய்தா போலவோ, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு போலவோ அது வெறுமனே ஆயுதப்பயிற்சி பெற்ற தனிநபர்கள் மட்டுமே இருக்கும் அமைப்பு கிடையாது. பாலஸ்தீன மக்களிடம் கணிசமான செல்வாக்கு பெற்ற அமைப்பு. எப்படி ஆப்கானிஸ்தானில் மக்களுடன் தாலிபன்கள் கலந்திருந்து அமெரிக்க தாக்குதலை 20 ஆண்டுகள் சமாளித்தார்களோ, அப்படி ஹமாஸ் அமைப்பும் சமாளிக்கக்கூடும்.
இந்தச் சூழல்தான் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தத்தினை இன்னும் சிக்கலானதாக மாற்றியிருக்கிறது. உலகின் மிகுந்த மக்கள் நெரிசல்மிக்க நகர்ப்புறப் பகுதி ஒன்றில் நீண்ட காலத்துக்கு நடக்கப் போகும் யுத்தமாக இது மாறக்கூடும்.

இவ்வளவு ஆபத்தான பின்விளைவுகள் வரக்கூடும் என்று தெரிந்தும், ஹமாஸ் ஏன் தாக்குதலைத் தேர்வு செய்தது? காரணம், இஸ்‌ரேலுக்கு இப்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம்.

இஸ்‌ரேல் - ஹமாஸ் யுத்தம் 1: ஏன் தாக்கியது ஹமாஸ்?

மத்தியக் கிழக்கு ஆசியாவில் அரபு நாடுகளுக்கு மத்தியில் யூதர்களின் தேசமாக இஸ்ரேல் உதயமான நாளிலிருந்து அதை விரோதியாகவே அரபு நாடுகள் பார்த்தன. அதை ஒரு தேசமாகவே யாரும் அங்கீகரித்ததில்லை. இஸ்‌ரேலுடன் அங்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ யுத்தம் செய்யாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால், எவ்வளவு நாட்களுக்குத்தான் பக்கத்தில் இருக்கும் ஒருவரை விரோதியாகவே பார்த்துக்கொண்டிருக்க முடியும்?!

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இஸ்ரேலுடன் எந்த அரபு நாடும் யுத்தம் செய்ததில்லை. மாறாக இயல்பான உறவு வட்டத்துக்குள் இதுவரை ஆறு நாடுகள் வந்துவிட்டன. அமெரிக்காவின் ஏற்பாட்டில் முதன்முதலில் எகிப்து பேச்சுவார்த்தை நடத்தி இஸ்ரேலுடன் ராஜ்ஜிய உறவுகளை ஏற்படுத்திக்கொண்டது. அடுத்து ஜோர்டான் இதைச் செய்தது. ‘ஆப்ரஹாமிக் ஒப்பந்தங்கள்’ என்று அழைக்கப்படும் இதேபோன்ற ஒப்பந்தங்களை மற்ற நாடுகளும் படிப்படியாக ஏற்படுத்திக்கொண்டன.

‘அரபு அமைதி முயற்சி’ என்ற பெயரில் சவூதி அரேபியா கடந்த 2002-ம் ஆண்டில் ஒரு அமைதி முயற்சியை எடுத்தது. ‘கடந்த 1967-க்குப் பிறகு ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து இஸ்‌ரேல் வெளியேற வேண்டும். பாலஸ்தீன அகதிகள் பிரச்னையைத் தீர்க்க வேண்டும், சுதந்திர பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை ஆக்க வேண்டும். இதை ஏற்றுக்கொண்டால் அரபு நாடுகள் இஸ்ரேலுடன் உறவு பாராட்டும்’ என்றது. அரபு லீக் அமைப்பும் இதை வழிமொழிந்தது. ஆனால், இந்த நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்கவில்லை.

இதற்கிடையே அமெரிக்கா தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அரபு நாட்டுக்கும் நிர்ப்பந்தம் கொடுத்து, இஸ்ரேலுடன் இணக்கமாகப் போகச் சொன்னது.

ஹமாஸ்

ஹமாஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான், மொராக்கோ என்று அடுத்தடுத்து பல நாடுகள் இஸ்ரேலுடன் இணக்கமாகப் போயின. கடைசியாக இப்போது இஸ்ரேலின் பரம எதிரியாக இருந்த சவூதி அரேபியாவும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. பாலஸ்தீனம் தொடர்பாக எந்த உறுதிமொழியும் கொடுக்காமலே அரபு நாடுகளுடன் இஸ்‌ரேல் நட்பாகப் போக முடிவது, பாலஸ்தீனர்களை கோபப்படுத்தியது. இந்தக் கோபத்தையே இப்போது தாக்குதல் மூலம் ஹமாஸ் வெளிப்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அரபு உலகமே கொந்தளித்து நிற்க, சவூதி அரேபியா பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டது.

பாலஸ்தீனர்களுக்காக எல்லைகளைக் கடந்து பல அரபு நாடுகளிலும் மக்கள் வீதிக்கு வருவார்கள் என்று ஹமாஸ் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. ஏன் அப்படி எல்லோரும் வர வேண்டும்? பாலஸ்தீனத்துக்கு என்ன ஆனது?
(நாளை பார்க்கலாம்…)

நன்றி : தி.முருகன் (விகடன்)

Leave A Reply

Your email address will not be published.