ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி படுமோசமாக தோற்றது.

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. சென்னையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்சில் சுழல் அதிகமாக இல்லை. பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282/7 ரன்களை எடுத்தது. ஓபனர், சபீக் 58 (75) ரன்களை அடித்தார். அடுத்து, கேப்டன் பாபர் அசாமும் 74 (92) சிறப்பாக செயல்பட்டு, ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும், இமாம் உல் ஹக் 17 (22), முகமது ரிஸ்வான் 8 (10), சௌத் ஷாஹீல் 25 (34) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், அணிக்கு பின்னடைவு ஏற்பட்டபோது, இறுதிக் கட்டத்தில் சதாப் கான் 40 (38), இப்டிகார் அகமது 40 (27) ஆகியோர் அதிரடி காட்டியதால், பாகிஸ்தான் அணி 282 ரன்களை எடுத்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவிக்க ஆரம்பித்தது. குறிப்பாக ஓபனர்கள் குர்பஸ், இப்ராஹீம் ஜோர்டன் இருவரும் தொடர்ந்து காட்டடி அடித்து ரன்களை குவித்தார்கள். இறுதியில், குர்பஸ் 65 (53), ஜோர்டன் 87 (113) இருவரும் அதிரடி காட்டியதால், ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்கள் முடிவில் 286/2 ரன்களை குவித்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இப்போடியில் வென்றதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகளுடன், 10ஆவது இடத்தில் இருந்து 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணியும் 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று, 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணி இனிவரும் 4 போட்டிகளிலும் வென்றாக வேண்டும். பாகிஸ்தான் அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளிலும் வெற்றியைப் பெறுவது மிகமிக கடினம். இதனால், உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு மிகமிக குறைவுதான் எனக் கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.