இந்தியா அபார வெற்றி: அரையிறுதி உறுதி!!

லக்னோவில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான லீக் ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பியது.

இதுவரை இந்தியா விளையாடிய 5 லீக் ஆட்டங்களிலும், சேஸிங் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இதில், முதலில் பந்துவீசிய இந்திய அணி, எதிரணிகளை கட்டுப்படுத்தி, பிறகு அபாரமாக பேட்டிங் செய்து வெற்றிகளை பெற்று வந்தது. இந்நிலையில், தற்போது 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், இந்திய பேட்டர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், இந்திய பேட்டர்களோ அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து சொதப்பினார்கள்.

இந்திய அணி ஓபனர் ஷுப்மன் கில் 9 (13), விராட் கோலி 0 (9), ஷ்ரேயஸ் ஐயர் 4 (16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும், இங்கிலாந்து அணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி அழுத்தங்களை ஏற்படுத்தினார். இதனால், ராகுல் 39 (58) ரன்களை மட்டும் சேர்த்து நடையைக் கட்டினார். தொடர்ந்து, ரோஹித் ஷர்மாவும் 87 (101) அதிரடியாக ஆட முற்பட்டு நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டபோது, சூர்யகுமார் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்.

இறுதிக் கட்டத்தில், சூர்யகுமார் யாதவும் 49 (47) ரன்களை எடுத்து நடையைக் கட்டினார். கடைசியாக 4 ஓவர்கள் எஞ்சியிருந்தது. அப்போது பும்ரா 16 (25), குல்தீப் யாதவ் 9 (12) ஆகியோர் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ரன்களை அடித்தார்கள். இதனால், இந்திய அணி 229/9 ரன்களை எடுத்தது. கோலி இப்போட்டியில் 9 பந்துகளை எதிர்கொண்டு டக்அவுட் ஆனார். உலகக் கோப்பையில் கோலி டக்அவுட் ஆவது இதுதான் முதல்முறை.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் எந்த பேட்டரும் 30 ரன்களை கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக, லிவிங்ஸ்டன் 27 (46) ரன்களை அடித்தார். மற்றவர்கள் சொதப்பினார்கள். இதனால், இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் முடிவில் 129/10 ரன்களை மட்டும் சேர்த்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஷமி 4/22 விக்கெட்களை கைப்பற்றினார். பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இப்போட்டியில் வென்றதன் மூலம் 12 புள்ளிகளுடன் இந்திய அணிஅரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.