பொருளாதாரக் கொலைகாரர்கள் யார் என்று வரலாறு தீர்ப்பு வழங்கி உள்ளது! – சஜித்

“நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களைச் சட்டத்துக்கு முன்னால் கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். என்றாலும், தற்போது உயர்நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் இந்த நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களைச் சட்டத்துக்கு முன் கொண்டுவந்தோம்.

அதற்காக எங்களுக்கு முன்னாள் சிறந்த மூன்று புத்திஜீவிகள், திறமையான சட்டத்தரணிகளும் இருந்தனர். நாட்டை வங்குராேத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களைச் சட்டத்துக்கு முன்னால் கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

அதாவது இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கின்றது.

நாட்டை வங்குராேத்து அடையச் செய்தது யார் என்பது தொடர்பாக கருத்தாடல்கள் இடம்பெற்று வந்திருந்தன. என்றாலும் இந்தப் பொருளாதார வங்குராேத்து நிலைக்கு யார் காரணம் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாகப் பெயர் குறிப்பிட்டு தெரிவித்திருக்கின்றது.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து பொருளாதாரக் கொலைகாரர்களாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பவர்களே இந்த நிலைக்குக் காரணமாகும்.

ஒட்டுமொத்த சமூகமும், ஒவ்வொருவரும், வங்குரோத்து தன்மையால் வாழ்வாதாரம் அழிந்த தரப்பினர் போன்றவர்கள், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பாராபட்சத்துக்கு இந்த நபர்களிடம் இழப்பீடு கோரலாம்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் யார் என்பதை நிரூபிக்க முடிந்துள்ளது. இதனை வெளிப்படுத்தக் காரணமான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் பேரவை மற்றும் சட்டத்தரணிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.