கடலில் விழுந்து நொறுங்கிய சந்திரயான்- 3 ராக்கெட்டின் ஒரு பகுதி… இஸ்ரோ அறிவிப்பு!

நாட்டின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிச் சென்ற எல்விஎம்-3 எம்4 ராக்கெட்டின் ஒரு பகுதி, கட்டுப்பாட்டை இழந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலம் சரியாக அதன் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, LVM3 M4 ராக்கெட்டின் பாகங்கள், இஸ்ரோவின் கட்டுப்பாட்டுடன் விண்வெளியில் மிதந்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில், LVM3 M4 ராக்கெட்டின் கிரையோஜெனிக் மேல் நிலை, புதன்கிழமை சுமார் 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த பாகம், வட பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐநா சபை மற்றும் ஐஏடிசியின் விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளின்படி, ராக்கெட் ஏவப்பட்ட 124 நாட்களில் கிரையோஜெனிக் பாகம் விண்வெளியிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட் தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அதன் பாகங்களை செயலிழக்கச் செய்தல், அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கான நீண்ட கால பாதுகாப்பு பணிகளை இந்தியா சரியாகச் செய்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.