பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த விஜயசாந்தி

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான விஜயசாந்தி,காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்துக்கு வரும் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக அறிவித்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகியான விஜயசாந்திக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு தரவில்லை. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. இதனிடையே விஜயசாந்தி, பாஜகவிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆக்சன் ஹீரோயினாக சினிமாவில் வலம் வந்த விஜயசாந்தி, ரஜினிகாந்த் நடித்த மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலமாக தமிழக மக்கள் மத்தியிலும் நன்கு கவனம் பெற்றவர். ஹீரோக்களுக்கு இணையான மிரட்டலான ரோல்களில் நடித்ததால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரிலும் ரசிகர்கள் இவரை அழைத்து வருகின்றனர்.

1990களின் கடைசியில் அரசியலுக்கு வந்த விஜயசாந்தி பாஜக, தனிக்கட்சி, பி.ஆர்.எஸ், காங்கிரஸ் என அவ்வப்போது கட்சி விட்டு கட்சி தாவிக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான் மீண்டும் காங்கிரஸிலேயே ஐக்கியம் ஆகியுள்ளார் நடிகை விஜயசாந்தி.

Leave A Reply

Your email address will not be published.