மூன்றாண்டாக ஆளுநர் என்ன செய்தார்..? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழ்நாடு அரசின் மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்களான வில்சன், முகுல் ரோஹத்கி மற்றும் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் எந்த விளக்கமும் அளிக்காமல், 10 மசோதாக்களை திரும்ப அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் குறிப்பிடப்பட்டது. அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

இரண்டாம் முறை அனுப்பும் மசோதாக்களை நிதி மசோதாவாக கருதி, உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. சட்டமன்றம் இயற்றிய மசோதாவை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திர சூட், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகவும், 13 ஆம் தேதி மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆக, கடந்த 2-3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மசோதாக்கள் மீது ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு அனுப்பி வைத்த 181 மசோதாக்களில் 152-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 12 மசோதாக்களில், குடியரசு தலைவருக்கு 2 அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, குட்கா விநியோகிப்பாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, மற்றும் சி.விஜயபாஸ்கர் மீது சிபிஐ வழக்கு பதிவு விசாரணை நடத்தியது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, கடந்தாண்டு அனுமதி கோரிய நிலையில், கடந்த திங்கட்கிழமை ஆளுநர் இசைவு தெரிவித்ததகாக கூறப்பட்டுள்ளது. இதே போன்று, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான சொத்து குவிப்பு வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ள கடந்தாண்டு அனுமதி கோரியிருந்தது. அதற்கு கூடுதல் விவரம் கேட்டதாகவும், அதனை கடந்த 18 ஆம் தேதி அரசு திருப்பி அனுப்பி இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க, கடந்த மே மாதம் 15 ஆம் தேதி அரசு கோரிய அனுமதி, பரிசீலனையில் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஜி.பாஸ்கரனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு கடந்த 18 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக 580 முன்மொழிவுகள் வரப்பட்டதாகவும், அதில் 362-க்கு ஒப்புதல் அளித்ததாகவும் ஆளுநர் தரப்பில் கூறப்பட்டது. 165 முன்மொழிவுகளை நிராகரித்ததாகவும், 53 பரிசீலனையில் இருப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லாததை ஆளுநர் கண்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது. அதில், டி.என்.பி.எஸ்.சி தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டவர், நியமிக்கப்பட்டால் ஓராண்டு மட்டுமே பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போன்று, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களில் ஒருவர் மீது பல்கலைக்கழகத்தில் முறைகேடு புகார் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசு செயல்படாத காரணத்தால், திருத்தி அமைத்ததாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணைவேந்தர் தேடுதல் குழுவில் யூஜிசி பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், யூஜிசி பிரதிநிதியை தமிழ்நாடு சேர்க்காததால் குழுவை திருத்தி அமைத்தேன் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஆளுநருக்கு உள்ள துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயல்வதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, கடந்த 18 ஆம் தேதி, அரசு அனுப்பிய 10 மசோதாக்களை பரிசீலனை செய்ய ஆளுநருக்கு அவகாசம் தேவை என்றும் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பேட்டி வில்சன், தமிழக அரசு வழக்கறிஞர் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் தொடர்பான நடவடிக்கை, கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் குறித்தும் டிசம்பர் ஒன்றாம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.