வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகச் சனியன்று கண்டனப் போராட்டம்.

வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வவுனியா ஊடக அமையத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், அவர்களை அச்சுறுத்திப் பழிவாங்கும் செயற்பாடுகளும் அரச இயந்திரங்களான பொலிஸாராலும், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுத் துறையினராலும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு – கிழக்கில் ஊடகவியலாளர்கள் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், வவுனியாவில் செய்தி சேகரில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் மீதும் பொலிஸாரால் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரியும் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாகக் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்துமாறு கோருகின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.