டிசம்பர் 1 முதல் மலேசியா செல்லும் வெளிநாட்டவர் மின்னிலக்க வருகை அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மலேசியா சென்றடைவதற்கு முன்னர் அந்த மின்னிலக்க அட்டை நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்று மலேசியக் குடிநுழைவுத்துறை வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

மலேசிய நிரந்தரவாசிகள், மலேசிய தானியக்கக் குடிநுழைவு முறை அட்டைதாரர்கள், குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றத் தேவையின்றி சிங்கப்பூரிலிருந்து மலேசியா வழியாக இடைவழிப் பயணம் செய்வோருக்குப் புதிய நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குடிநுழைவுத்துறையின் மலேசிய மின்னிலக்க வருகை அட்டை இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியா செல்வதற்கு மூன்று நாள்களுக்குள் அந்த அட்டை நிரப்பப்பட வேண்டும் என்றும் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் தங்கள் பெயர், நாட்டுரிமை, கடப்பிதழ் விவரம், வந்திறங்கும் மற்றும் புறப்படும் தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அந்த இணையப்பக்கத்தில் நிரப்ப வேண்டும்.

இவ்வாண்டு ஜனவரியில், ஜோகூர் பாருவில் இருக்கும் இரு தரைவழி சோதனைச்சாவடிகளில் மின்நுழைவு வசதிகளை சிங்கப்பூரர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதற்கு மலேசிய மின்னிலக்க வருகை அட்டை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு மாதம் கழித்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1லும் முனையம் 2லும் குடிநுழைவு நடைமுறையை நிறைவேற்றுவதற்கு தானியக்க நுழைவு முறையைப் பயன்படுத்த சிங்கப்பூரர்களுக்கும் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.