15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பூசாரிக்கு , 12 வருட கடூழிய சிறை!

கிளிநொச்சி , பளை பிரதேசத்தில் வைத்து , 15 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட பூசாரிக்கு , 12 வருட கடூழியச் சிறைத்தண்டனையை கடந்த 18ஆம் திகதி , கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன், வழங்கினார்.

இந்த சிறைத்தண்டனையுடன், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக இரண்டு லட்சம் ரூபாயையும் , அபராதமாக பத்தாயிரம் ரூபாயையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமியின் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் 6 மாத சிறைத் தண்டனையும் அதிகரிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பூசாரியின் மனைவியின் பாதுகாப்புக்காக சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் குறித்த சிறுமியை, அவர்களது வீட்டில் வைத்திருந்த போதே , ஜூலை 11, 2016 அன்று சிறுமி பூசாரியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் , சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

சிறுமியின் சாட்சியம் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.