கழுத்தறுப்புகளை தாண்டி நடந்த குவாதமாலா தேர்தல் வெற்றி : சண் தவராஜா (Video)

மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெர்னாடோ அறிவலோ பெரும் போராட்டங்களின் பின்னர் ஒரு வழியாகப் பதவி ஏற்றிருக்கின்றார். அவரது பதவியேற்பைத் தடுத்துவிட இறுதி நிமிடம் வரை முயற்சி செய்த அவரது அரசியல் எதிரிகள் – அமெரிக்கா முதல் பல உலக நாடுகள் வழங்கிய அழுத்தங்களின் பின்னர் – தமது நிலைப்பட்டில் இருந்து பின்வாங்கி பதவியேற்புக்கு அரைமனதோடு சம்மதம் வழங்கியிருந்தனர். அரசியலமைப்பின் பிரகாரம் அவரது பதவியேற்பைத் தடுத்துவிட முடியாத நிலையில் கழுத்தறுப்பு வேலைகளில் இறங்கிய எதிர்க் கட்சியும் அவர்களின் பின்னணியில் உள்ள பெரு வணிகர்களும் அடிபணியும் நிலை உருவாகியிருந்தது.

கட்டுரை வீடியோ வடிவில்

பதவியேற்பைத் தடுத்துவிட எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி அறவழியில் போராட்டங்களை நடத்த முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நிராகரித்திருந்த அறிவலோ, இறுதி நிமிடம் வரை நாடாளுமன்றம் தனது பதவியேற்பை நடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டிருந்தார். எனினும் பதவியேற்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவரது ஆதரவாளர்கள் கொதித்துப் போயிருந்த நிலையில் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறிப் புகுவதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையில் பாரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தும் நிலை உருவானது.

இதேவேளை, நாட்டின் பழங்குடி மக்கள் நாட்டின் பல இடங்களிலும் திரண்டு வீதித்தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். “இது நாள் வரை இந்த நாட்டை ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் சாமானிய மக்களின் நலன்களில் அக்கறை கொண்டிருக்கவில்லை. முதல் தடவையாக அறிவலோ தலைமையில் நல்லவை நடக்கும் என நம்புகிறோம். புதிய ஆட்சியாளர் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது” என மக்கள் மத்தியில் உரையாற்றிய பழங்குடிகளின் தலைவர் அலிடா விசன்ரே தெரிவித்து இருந்தார்.

திகில் திரைப்படம் ஒன்றின் காட்சிகளுக்கு ஒப்பாக சம்பவங்கள் யனவரி 14ஆம் திகதி முதல் நடந்தேறி இருந்தன. நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னதாக பதவியேற்பு நடைபெற்று இருந்தது. குறிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 9 மணி நேர தாமதத்தின் பின்னரே பதவியேற்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைகளின் தலைவர் யோசப் பொரோல், கொலம்பிய அரசுத் தலைவர் குஸ்ராவோ பெற்ரோ, ஸ்பெயின் அரசர் ஆறாம் பிலிப் ஆகியோர் உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர். சிலி நாட்டின் அரசுத் தலைவர் கப்ரியேல் பொரிக் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த போதிலும் பதவியேற்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைபெற்ற விதம் தொடர்பிலும், தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் உலக நாடுகள் திருப்தி வெளியிட்டிருந்தன. ‘ஊழலை ஒழிப்பதே தனது முதற்பணி’ என்ற கோசத்துடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அறிவலோ, தனது கன்னியுரையிலும் ஊழல் ஒழிப்பே பிரதானம் என அறிவித்திருந்தார்.

கடந்த வருடம் யூன் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் அறிவலோ எதிர்பாராத விதமாக இரண்டாம் இடத்தைப் பிடித்ததும் அதிர்ந்துபோன எதிர்க்கட்சித் தரப்பு ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் சுற்றில் அறிவலோ அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை ஜீரணிக்க முடியாமல் திணறியது.

இது தொடர்பில் 27.08.23 அன்று சமகாலத்தில் ‘குவாதமாலா – தப்பிப் பிழைப்பாரா புதிய தலைவர்?’ என்ற கட்டுரையில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 64 வயது நிரம்பிய அறிவலோ அடுத்த வருடம் யனவரி மாதம் 14ஆம் திகதி தனது பதவியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்க உள்ளார்.

ஒரு புத்திஜீவியும், குவாதமாலாவில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத் தலைவரான யுவான் யோசே அறிவலோவின் புதல்வரும், 1954ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ.யினால் நடத்தப்பட்ட சதியின் காரணமாக உருகுவேயில் தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த அனுபவத்தைக் கொண்டவருமான பெர்னாடோ அறிவலோ ஊழல் கறைபடிந்த வரலாறைக் கொண்டுள்ள குவாதமாலாவில் நல்லாட்சியை வழங்குவாரா? அவரால் அதற்கு முடியுமா? ஊழலில் திளைத்த பெருச்சாளிகள் நிறைந்துள்ள அந்த நாட்டில் அது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவாரா என்பன போன்ற கேள்விகள் எழுவதைத் தடுத்துவிட முடியவில்லை.

……நாட்டில் நிலவும் ஊழலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் போவதாகத் தெரிவித்த நிலையிலேயே அறிவலோவை மக்கள் தேர்தலில் வெற்றியடையச் செய்தார்கள். தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்னதாக அவர் தனது பதவியைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. 160 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு 23 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன. இந்நிலையில் அவரது பதவியைப் பறிப்பதற்கான முயற்சி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையே உள்ளது.

இந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்ட சந்தேகங்களை மெய்ப்பிக்கும் வகையிலேயே காரியங்கள் நடந்தேறி இருக்கின்றன. அறிவலோ ஆட்சியின் எதிர்காலம் கூட எதிர்வுகூறிய படியே இருக்கலாம்.

தேர்தலில் வெற்றிபெற்று பதவியைப் பெறுவதற்கே இத்தனை தடைகள், பிரச்சனைகளைச் சந்தித்துள்ள அறிவலோ தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார் என்ற ஐயம் தொடரவே செய்கிறது. அது மாத்திரமன்றி அவரது பதவியேற்பு அமெரிக்காவின் உதவியுடன் சாத்தியமாகி உள்ளமை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் இதயசுத்தியுடன் செயற்படுவாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

தேர்தல் காலகட்டத்தில் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டோரின் விருப்புக்குரிய தேர்வாக விளங்கியவர் அறிவலோ. அமெரிக்காவின் கொல்லைப்புறமான தென்னமெரிக்காவில் தொடர்ந்து இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை தரமசங்கடத்துடன் பொறுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா அறிவலோவை ஏற்றுக் கொள்வது என்றால் நம்புவதற்குச் சிரமமாகவே உள்ளது. அது மாத்திரமன்றி தனது கன்னியுரையில் அமெரிக்காவுக்கு அறிவலோ நன்றி தெரிவித்துள்ள அதேவேளை அமெரிக்க துணை அரசுத் தலைவி கமலா ஹாரிஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவரை வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்ய அழைப்பு விடுத்துள்ளமையையும் கவனிக்க வேண்டியுள்ளது.

‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்ற சொலவடையை நாமறிவோம். அதுவும் அமெரிக்க விடயத்தில் நலன்களைக் கருத்தில் கொள்ளாது காரியங்கள் நிகழ்வதில்லை. எனவே, அறிவலோவின் எதிர்காலச் செயற்பாடுகள் மக்கள் நலன் சார்ந்து இருக்குமா எனச் சந்தேகம் கொள்வது நியாயமானதே.

Leave A Reply

Your email address will not be published.