குவாதமாலா – தப்பிப் பிழைப்பாரா புதிய தலைவர்? சுவிசிலிருந்து சண் தவராஜா
மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் ஊழல் எதிர்ப்புப் போராளியான பெர்னாடோ அறிவலோ வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 60.90 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சான்ட்ரா ரோறஸ் 39.10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவியுள்ளார். யூன் 25ஆம் திகதி நடைபெற்ற முதலாவது சுற்றுத் தேர்தலில் அறிவலோவை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார் சான்ட்ரா ரோறஸ்.
2008 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்த அதிபரின் மனைவியாக, முதல் பெண்மணியாக இருந்த இவர் முதலாவது சுற்றுத் தேர்தலில் 20.98 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தார். (2015, 2019, 2023 எனத் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் போட்டியிட்ட இவர் தொடர்ந்து இரண்டாவது இடத்தையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.)
மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டிபோட்ட அத்தேர்தலில் 15.58 விழுக்காடு வாக்குகளுடன் பெர்னாடோ அறிவலோ இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். எந்தவோரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையில் இரண்டாவது சுற்று வாக்களிப்பு ஆகஸ்ட் 20ஆம் திகதி நடைபெற்றது. கருத்துக் கணிப்புகளில் ஏலவே குறிப்பிட்டிருந்ததைப் போலவே அறிவலோ அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
2020ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்துவரும் அறிவலோ, முன்னதாக ஸ்பானிய நாட்டின் தூதுவராகவும், நாட்டின் துணை அயலுறவு அமைச்சராகவும் பதவி வகித்த அனுபவத்தைக் கொண்டவர் ஆவார்.
பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாதவகையில் நடைபெற்று முடிந்த அரசுத் தலைவர் தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி எனக் குறிப்பிடப்பட்டாலும் வாக்களித்த மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு பார்க்கும் போது ஒரு வகையில் அது ஜனநாயகத்தின் தோல்வியாகவே கருதப்பட வேண்டும்.
ஒரு கோடியே 70 இலட்சம் மக்கட்தொகையைக் கொண்ட குவாதமாலாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 93,61,068. முதல் சுற்றுத் தேர்தலின் போது இந்த எண்ணிக்கை 92,49,794. முதல் சுற்றுத் தேர்தலில் 55,57,273 பேர் வாக்களித்திருந்தனர். இது அன்றைய மொத்த வாக்காளர் தொகையில் 60.08 விழுக்காடு ஆகும். அளிக்கப்பட்ட வாக்குகளில் 17.39 விழுக்காடு வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இது தவிர 6.99 விழுக்காடு வாக்குகள் வெற்று வாக்குகளாக இருந்தன. மொத்தத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் சற்றொப்ப 24 விழுக்காடு வாக்குகள் நிராகரிக்கப்படும் வாக்குகளாக இருந்தமையை தற்செயல் நிகழ்வாகக் கருதிவிட முடியாது. அது ஒரு ஜனநாயக அடிப்படையிலான எதிர்ப்பு நடவடிக்கையாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஊகத்தை நிரூபிப்பது போன்றே இரண்டாவது சுற்று வாக்களிப்பும் அமைந்துள்ளது.
இரண்டாவது சுற்றில் மொத்தம் 44.96 விழுக்காடு மக்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர். முதல் சுற்றில் வாக்குப் ‘பகிஸ்கரிப்பை’ மேற்கொண்டிருந்த பெரும்பாலானோர் இரண்டாவது சுற்றைப் புறக்கணித்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. இரண்டாவது சுற்றில் கூட 3.50 வீதமானோரின் வாக்கு செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 1.25 வீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக உள்ளன.
ஒரு நாட்டின் மக்கட்தொகையின் 44.96 வீதத்தினர் வாக்களிப்பில் கலந்து கொள்ள, 55.04 விழுக்காடு மக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் வாக்களிப்பில் இருந்து விலகி நிற்பதை ஜனநாயகத்தின் வெற்றி என எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
ஆனால் இதேபோன்று ஒரு நாட்டின் கணிசமான மக்கள் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொள்ளாமல் விலகி இருக்கும் போக்கு உலகளாவிய அடிப்படையில் தொடரவே செய்கின்றது. இத்தகைய போக்கிற்கு ‘ஜனநாயகத்தின் தொட்டில்’ எனப் பெருமை பேசும் மேலைத்தேய நாடுகளும் விதிவிலக்கு அல்ல.
தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 64 வயது நிரம்பிய அறிவலோ அடுத்த வருடம் யனவரி மாதம் 14ஆம் திகதி தனது பதவியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்க உள்ளார். ஒரு புத்திஜீவியும், குவாதமாலாவில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது அரசுத் தலைவரான யுவான் யோசே அறிவலோவின் புதல்வரும், 1954ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ.யினால் நடத்தப்பட்ட சதியின் காரணமாக உருகுவேயில் தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த அனுபவத்தைக் கொண்டவருமான பெர்னாடோ அறிவலோ ஊழல் கறைபடிந்த வரலாறைக் கொண்டுள்ள குவாதமாலாவில் நல்லாட்சியை வழங்குவாரா? அவரால் அதற்கு முடியுமா? ஊழலில் திளைத்த பெருச்சாளிகள் நிறைந்துள்ள அந்த நாட்டில் அது சாத்தியமா? எல்லாவற்றுக்கும் மேலாக அவர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவாரா என்பன போன்ற கேள்விகள் எழுவதைத் தடுத்துவிட முடியவில்லை.
சட்டவாக்கத் துறை, நீதித் துறை, அமுலாக்கத் துறை என அங்கிங்கெனாதபடி ஊழலில் மூழ்கிக் கிடக்கும் நாட்டில் அறிவலோவின் சொந்தக் கட்சி கூட ஊழல் பேர்வழிகளின் கரங்களில் சிக்கிச் சீரழிவதில் இருந்து தப்பவில்லை.
‘ட்ரான்ஸ்பரன்சி இன்ரர்நஷனல்’ என்ற பன்னாட்டு அமைப்பு 2022இல் ஊழல் தொடர்பாக 180 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில் வெளியிட்ட பட்டியலில் குவாதமாலா 150ஆவது இடத்தில் உள்ளது. இதே 150 ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்தத் தரவே குவாதமாலாவில் நிலவும் ஊழலின் அளவைத் தெளிவாகக் காட்டப் போதுமானது.
முதலாம் கட்ட அரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்த கையோடு அறிவலோ சார்ந்த கட்சியான செமில்லா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கட்சியைத் தாபிப்பதற்காகக் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் உள்ள 5,000 வரையான கையொப்பங்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றத்தால் கட்சி தடைசெய்யப்பட்டது. பின்னர் இந்தத் தடைக்கு அரசியலமைப்பு நீதிமன்றம் விலக்களித்த நிலையிலேயே அறிவலோ இரண்டாவது சுற்றில் போட்டியிட முடிந்தது.
நாட்டில் நிலவும் ஊழலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் போவதாகத் தெரிவித்த நிலையிலேயே அறிவலோவை மக்கள் தேர்தலில் வெற்றியடையச் செய்தார்கள். தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன்னதாக அவர் தனது பதவியைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. 160 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு 23 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன. இந்நிலையில் அவரது பதவியைப் பறிப்பதற்கான முயற்சி எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையே உள்ளது.
36 ஆண்டு கால உள்நாட்டுப் போரைச் சந்தித்த குவாதமாலாவில் ஆயுதக் குழுக்களுக்குப் பஞ்சமில்லை. கொலை, போதைப் பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புவோரை சட்டவிரோதமாக அழைத்துச் செல்லுதல் என இந்த ஆயுதக் குழுக்கள் பல்வேறு சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. காவல் துறை, படைத் துறை என்பவற்றின் முன்னாள் அங்கத்தவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆயுதக் குழுக்களுக்கு அரசின் உயர் மட்டம் வரை ஆதரவு உள்ளதாகத் தெரிகின்றது.
தனக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் கலகம் செய்ய முனைவோர், ஊழல் கறை படிந்த நீதித்துறை மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்யக் காத்திருப்போர், ஆயுதக் குழுக்களைப் பாவித்து சட்டம் ஒழுங்கை சீர்கெடச் செய்யக் காத்திருப்போர் என பல்வேறு முனைகளிலும் இருந்து வரக் கூடிய தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டிய நிலையில் அறிவலோ உள்ளார். 4 வருடப் பதவிக் காலம் என்பது இவற்றைச் சமாளிக்கவே போதாது. இதில் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எங்கே நேரம் இருக்கப் போகிறது? அவ்வாறு ஏதும் நடந்தால் அது பேரதிசயமே.