பேசி பேசியே கொல்கின்றார் மலையக அமைச்சர்! நண்பன் ஆறுமுகத்தின் ஆன்மாவும் அழுகின்றது!! – சபையில் ஜீவனைப் போட்டுத் தாக்கிய மனோ

“பொய், பித்தலாட்டம் பேசுகின்ற மலையக அமைச்சரின் (ஜீவன் தொண்டமான்) நடத்தை கண்டு, எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மாதான் அழுகின்றது. அதுதான் உண்மை.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

“இந்தச் சபையில் நான் நேற்று இல்லாதபோது ஒரு மலையக அமைச்சர் என்னைப் பற்றி பொய், பித்தலாட்டம் நிறைந்த உரையை ஆற்றிவிட்டு சென்றுவிட்டார். அவருக்குப் பதில் சொல்வது எனக்கு இழுக்கு என நினைக்கின்றேன். இருந்தாலும்கூட நாட்டுக்கும், சமூகத்துக்கும் உண்மை தெரிய வரவேண்டும் என்பதற்காக ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.

2017 இல் எமது அரசின் காலத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்ட 10 ஆயிரம் பெருந்தோட்ட வீடுகளுக்கான உறுதிமொழி ஐந்து வருடங்களுக்குப் பிறகு நேற்றுமுன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தை வாழ்த்தி வரவேற்கின்றோம் என்றே நான் கூறி இருந்தேன். இப்படி இருந்தும் மனோ கணேசன் கூறுவதைக் கேட்டு பிள்ளையாரே அழுவார் என அந்த அமைச்சர் கூறுகின்றார். நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி பொய்யுரைக்கின்றார். பேசி, பேசியே கொல்கின்றார். பேசுவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.

பிள்ளையார் அழமாட்டார், பிள்ளையார் என்றால் யார் கணேசன், அந்தப் பெரிய பிள்ளையார் கூறுவதைத்தான் இந்தச் சின்னப் பிள்ளையார் செய்கின்றார் என்று பிள்ளையார் மகிழ்ச்சியடைகின்றார். இதுவே உண்மை.” – என்றார்.

(மனோ கணேசன், ஜீவன் தொண்டமானின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் மலையக அமைச்சர் என விளித்திருந்தார்.)

Leave A Reply

Your email address will not be published.