தொழில் சார் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.

நுண் கடன் நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டெழுவதற்கு பயிற்சிகளுடன் கூடிய தொழில் சார் முயற்சிகள் பெரிதும் துணையாக இருக்கும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்;ளார்.

கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று(24-09-2020) பகல் பெண்களுக்கான தொழில் சார் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டுஉரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பெண்களின் முயற்சியும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாக உள்ளது. அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஆண் பெண் இருபாலாரும் இணைந்து செயற்படுவதனால் தான் அபிவிருத்தியை அடையமுடியும்.
அத்தோடு வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்கு அது வழிவகுக்கும். எமது மாவட்டத்தைப்பொறுத்தவரையில் சனத்தொகை வீதத்தில் அதிகளவானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர்.
நாட்டில் பெண்களும் அபிவிருத்தி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்டாய தேவையாக அமைந்துள்ளது.
குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்ற அடிப்படையில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகக் காணப்படுகின்றது.
இவ்வாறான பெண்கள் வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காக பல்வேறு விதங்களில் போராடி பிரச்சனைகளுக்குள் சென்றிருப்பதை நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்களே அதிகமாக உள்ளனர்.இவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு தொழில்சார் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இவ்வாறான பயிற்சிகள் முக்கியமானதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிதியுதவியுடன் UNWOMEN,CHRYSALIS ஆகிய நிறுவனங்கள் உள்ளிட்ட 05 அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட தொழில் சார் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் உற்பத்தி பொருட்களும் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றுள்ளது.


இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் வடமாகாண ஆளுநரின் செயலாளர் பிரதி பிரதம செயலாளர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் மேற்படி நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிராந்தியப் பணிப்பாளர் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.