சபாநாயகரின் தலை தப்புமா? இன்று மாலை நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் வெளிநாடுகளுக்குப் பறந்திருந்த அமைச்சர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ளனர். அதேவேளை, வெளிநாடுகளுக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்த அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தைப் பிற்போட்டுள்ளனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னதாக 20 ஆம் திகதி (நேற்று) மாலை வாக்கெடுப்பு நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், எதிரணியின் கோரிக்கையின் பிரகாரம் விவாதத்துக்கு மேலும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களைப் புறந்தள்ளிய வகையிலேயே அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்துள்ளது.

இந்தப் பிரேரணையை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எனினும், குறித்த பிரேரணையை எதிர்த்து சபாநாயகரைக் காப்பாற்றுவதற்கு ஆளும் தரப்பும் பல்வேறுபட்ட வியூகங்களை வகுத்துள்ளது.

இன்றைய தினம் கட்சி தாவலுக்கும் சாத்தியம் இருக்கின்றது எனத் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.