அரச பெரும்புள்ளிகளின் தயவிலேயேதான் சம்பந்தனின் கொழும்பு இல்ல வாழ்க்கை! அதனால்தானாம் தமிழ்ப் பொதுவேட்பாளர் திட்டத்தை அவர் எதிர்க்கிறார் என விக்னேஸ்வரன் வியாக்கியானம்.

”துரதிஷ்டவசமாகத் தனது சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை சம்பந்தன் எதிர்க்கின்றார். அவர் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்து வருகின்றார். அரச பெரும்புள்ளிகளின் தயவிலேயே அவர் அங்கு வாழ்கின்றார். சிங்கள வேட்பாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய தமிழரின் வாக்குகள் சிதறிப்போவதை இதனால்தான் அவர் எதிர்க்கின்றார். தமிழர்களின் இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் கூர்ந்து அவதானித்தாரானால் – தமிழரின் எதிர்காலம் பற்றி ஆழமாகச் சிந்திப்பாரானால் – தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதை அவர் மனமார வரவேற்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் நிலைப்பாட்டுக்கு வியாக்கியானம் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.

தமது மாதாந்த கேள்வி – பதில் அறிக்கை என்ற பெயரில் தாம் அனுப்பும் அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்திருக்கின்றார்.

அந்த அறிக்கையின் முழு விவரமும் வருமாறு:-

கேள்வி: ஐயா! நீங்கள் மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை. முன்னர் நீதித்துறை, செயலாற்றுத்துறை சார்ந்தவராக இருந்து இன்று நீங்கள் சட்ட இயற்றுநராக இருக்கின்றபடியால் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நீங்கள் முன்னணியில் நின்று உதவி புரிய வேண்டும் அல்லவா? அவ்வாறு செய்வதில்லை ஏன்?

பதில்:- வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு நாவிருபது வருடங்களுக்குப் பின்னரும் நாடாளுமன்றம் செல்ல உத்தேசித்தது பெரும்பான்மையினர் எம்மை ஆளுவதற்காக நான் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு அல்ல. முக்கியமாக தமிழ் மக்களின் அவலங்களை உலகறியச் செய்யவே நாடாளுமன்ற தேர்தலில் நான் பங்கேற்றேன்.

எனது பதவியானது நாட்டின் மற்றைய இனங்களுக்கும் உலகத்தோருக்கும் எமது வடக்குகிழக்கு தமிழர்கள் பற்றிய அறிவைக் கொண்டு செல்லவே பாவிக்கப்படுகின்றது. இதுவரையில் பல வெளிநாட்டு அரச அலுவலர்களுக்கு எம் உண்மை நிலைபற்றி அறிவித்துவிட்டேன். மேலும் எமது நாட்டின் மக்களின் வரலாறு பற்றியும் கூறி வருகின்றேன்.

அரசிடம் இருந்து அமைச்சுப் பதவிகளையோ வேறு சலுகைகளையோ பெற எத்தனிப்பவர்கள் தான் சிங்களப் பெரும்பான்மையோர் தமக்கு சாதகமாக சட்டம் இயற்ற விழையும் போது அவர்களுக்கு உதவி புரியவேண்டும்.

ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதகம் மற்றும் பங்கம் ஏற்படுத்தும் சட்டவரைவுகளை விமர்சித்தே வருகின்றேன். எனது நாடாளுமன்றப் பேச்சுக்களைப் பரிசீலித்துப் பார்ப்பீர்களானால் அது புரியும்.

எனது முக்கிய கடமையாக நான் ஏற்றுக்கொண்டிருப்பன பின்வருமாறு:-

1. தமிழ் மக்களின் அவலநிலையை உலகத்தோருக்கும் இந்நாட்டுமக்களுக்கும் எடுத்துக் கூறுவது.
2. நடக்கும் அநியாயங்களை அடையாளப்படுத்தி அவை நடவாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது.
3. எமது வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களை ஒற்றுமைப்படுத்துவது.

இந்த நோக்குடன் வடக்கு மாகாண சபையில் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி வெளிக்கொண்டு வந்த இனவழிப்பு பற்றிய பிரேரணையின் ஒரு நீட்சியாக எம்மக்களுக்கு நடந்த அநியாயங்கள் பற்றிய முழு விவர நூல் ஒன்றினை எமது கட்சி வெளியிட இருக்கின்றது. வெகுவாக எனது நேரம் அதனுடன் செலவிடப்பட்டுள்ளது.

இவற்றைவிட பல கேள்வி பதில்கள், பிறநாட்டு இராஜதந்திரிகளுடனான கருத்துப் பரிமாற்றங்கள், தமிழ் ஆங்கில, சிங்கள செவ்விகள், மேடைப்பேச்சுகள் போன்றவற்றின் மூலமும் எமது வரலாறு, எமது அண்மைய அவலநிலை , வருங்காலத்தில் நாம் முகங்கொடுக்கக் கூடிய இன்னல்கள் போன்ற பலவற்றைப் பற்றியும் ஊரறிய, உலகறியக் கூறி வருகின்றேன்.

சிங்களத் தலைவர்களை நான் அறிவேன். காரியம் ஆகும் வரையில் காலைப்பிடிப்பார்கள். காரியமானவுடன் கழுத்தைப் பிடிப்பார்கள். அவ்வாறானவர்களுக்கு எனது அறிவையும் நிபுணத்துவத்தையும் நேரத்தையும் செலவிடுவதால் எமது தமிழ்பேசும் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை.

இவ்வாறான சிந்தனையின் அடிப்படையிலேயே தமிழ்ப் பேசும் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் பங்குபற்ற வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றேன்.

சம்பந்தன் துரதிஷ்டவசமாகத் தனது சொந்தக் காரணங்களுக்காகத் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதை எதிர்க்கின்றார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வருங்காலம் பற்றி அவர் ஆழ்ந்து சிந்தித்தால், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி தேர்தலில் பங்கு பற்ற வைப்பதே உசிதமான செயல் என்று விளங்கும்.

சம்பந்தன் தற்பொழுதும் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்து வருகின்றார். அரச பெரும்புள்ளிகளின் தயவிலேயே அவர் அங்கு வாழ்கின்றார். சிங்கள வேட்பாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய தமிழரின் வாக்குகள் சிதறிப் போவதை இதனால்தான் அவர் எதிர்க்கின்றார். தமிழர்களின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கூர்ந்து அவதானித்தாரானால் – தமிழரின் எதிர்காலம் பற்றி ஆழமாக சிந்திப்பாரானால் – தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதை அவர் மனமார வரவேற்க வேண்டும்.

தமிழ் பொதுவேட்பாளர் தகமைகள் உடையவராக இருந்தால் பல நன்மைகளை தமிழ்மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பார்.

1. தமிழர்களின் அரசியல் பிரச்சுனை இன்றுவரை தீரக்கப்படவில்லை என்பதையும் எமது பிரச்சினை என்ன என்பது பற்றியும் மக்களுக்கும் மற்றைய நாட்டவர்களுக்கும் அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்லி வைக்கலாம்.
2. தமிழர்கள் எதைத் தீர்வாகப் பெற எத்தனிக்கிறார்கள் என்பது பற்றியும் அதற்கான காரணங்களையும் வெளிப்படையாக எடுத்துக் கூறலாம்.
3. தமிழ்ப் பேசும் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டலாம்.
4. பேரம் பேசவரும் மற்றைய போட்டியாளர்களை எதைத் தருவீர்கள் என்று கேட்டு அவர்களை வெளிப்படையாக ஏற்க வைக்கலாம். இதற்கு ஏதேனும் ஒரு நாட்டின் இராஜதந்திரியை மத்தியஸ்தராக நிலைநிறுத்தி எழுத்தில் உடன்பாட்டைப் பெற்றபின் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானிக்கலாம்.
5. பகிஷ்கரிப்பதால் எந்த நன்னையும் ஏற்படாது. அரச ஆதரவு சக்திகள் எங்கள் வாக்குகளையும் தமது தலைவர்களுக்குப் பெற்றுக் கொடுத்து விடுவார்கள். முன்னர் பகிஷ்கரித்தபடியால் பதவிக்கு வந்தவர்கள்தான் பகிஷ்கரிக்கக் கோரியவர்களை அழித்தார்கள். ஆயுதங்களை மௌனிக்கச் செய்தார்கள்.
6. இன்னுமொரு உபாயம் உள்ளது. தமிழர்கள் அனைவரையும் தமது வாக்குகளை தகுதியற்றதாக்கக் கோரலாம். ஆனால், அதிலும் அரச சார்பு சக்திகளின் நடவடிக்கைகள் எமக்கு தோல்வியையே நல்கும்.

என்னிடம் கேட்ட கேள்விக்கு மேலதிகமாகவே பதில் அளித்துள்ளேன். காரணம் எமது பிரச்சினை வேறு. மத்திய அரசின் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளின் பிரச்சினை வேறு. எம்மை பலமிழக்கச் செய்து, எமக்குப் பல இன்னல்களை விளைவிக்கும் மத்திய அரசுக்குத் துணைபோகாது, எமது மக்களுக்கான சேவையை ஆற்றுவதே எனது கடப்பாடு. அதனையே நான் செய்து வருகின்றேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.