ஆசிரியையின் அற்புதமான வியாபாரம் ? அவரும் , தாயாரும் கைது

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வெயங்கொட பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது தாயாரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் பொதிகளை மறைத்து வைப்பதற்கும், ஈஸி கேஷ் ஊடாக பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் குறித்த இடங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிப்பதற்கும் ஆசிரியர் மேலும் பலரை நியமித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெயங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், நிட்டம்புவ மல்வத்த பிரதேசத்தில் வைத்து ஆசிரியை மற்றும் அவரது தாயார் கைதுசெய்யப்பட்டதுடன், ஆசிரியையிடம் 2,300 மில்லிகிராம் ஹெரோயினும், தாயிடம் 4,500 மில்லிகிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிட்டம்புவ திஹாரிய / மல்வத்தை / கொரசே உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியை பலரை பணியமர்த்தி ஹெரோயின் பொதிகளை கவனமாக மறைத்து வைத்து பணத்தை ஈஸி கேஷ் முறையில் பெற்றுக்கொண்டு மறைத்த இடங்களை கொள்வனவு செய்தவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய புத்தகம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் ஆசிரியையின் தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை ஆசிரியை மற்றும் தாயாரும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.