துரித அபிவிருத்திக்காக பிரதேச செயலகத்திற்கு 100 மில்லியன்… ரணில் மீண்டும் ஜனாதிபதியாக வர கிராமங்களை கைப்பற்றும் முயற்சி..

ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அந்த திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவது மந்தகதியில் காணப்படுவதால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து, வீதிகள், நீர்ப்பாசனம் போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரசாங்கம் இவ்வளவு பாரிய நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதாக அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம அபிவிருத்திக் குழுக்களின் முன்மொழிவுகளின் பிரகாரம் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட முன்மொழிவுகள் அரசாங்க உறுப்பினர்கள் தலைமையிலான உள்ளுர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு இறுதி அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் லட்சிய கிராம அபிவிருத்தித் திட்டமான ‘மலையக பத்தாண்டு 2024-2033’ திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் இந்தப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.