கர்நாடகாவை அதிரவைத்துள்ள பா.ஜ.க கூட்டணி வேட்பாளரின் காமலீலைகள்: வைரலான வீடியோக்களால் பின்னடைவு?

ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில்தான், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் விவகாரம் வெடித்தது. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய நூற்றுக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஒட்டுமொத்த கர்நாடகாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றன. மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்ட 2,900-க்கும் மேற்பட்ட செக்ஸ் வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்கள், ஹசன் தொகுதி முழுவதும் தேர்தலுக்கு முன்பு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தால், தேர்தலில் தங்களுக்குப் பின்னடைவு ஏற்படுமோ என்ற கவலையிலும் அச்சத்திலும் பா.ஜ.க., ஜே.டி.எஸ் தலைவர்கள் தவித்துவருகிறார்கள்.

‘முன்னாள் பிரதமரின் பேரன், முன்னாள் முதல்வரின் அண்ணன் மகன், நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்’ என்பதுதான் பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார். தன் வீட்டில் சமையல் செய்யும் பணிப்பெண்கள், தன் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள், தன்னிடம் உதவி கேட்டு வரும் பெண்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என நூற்றுக்கணக்கான பெண்களிடம் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப் பதாகச் சொல்லப்படுகிறது. பிரஜ்வல் மீது மட்டுமன்றி, அவருடைய தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் புகார் கிளம்பியிருக்கிறது. ரேவண்ணா வீட்டில் சமையல் வேலை செய்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீதும், தந்தை ரேவண்ணா மீதும் கர்நாடகா போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் மிகப் பெரிய பிரச்னையாக வெடித்ததால், ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டார் பிரஜ்வல். கட்சியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் பிரஜ்வலின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, ‘வெளியாகியிருக்கும் வீடியோக்கள் புதியவை அல்ல. சில வருடங்களுக்கு முந்தையவை’ என்று கருத்து தெரிவித்திருப்பது மேலும் சர்ச்சையாகியிருக்கிறது.

இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் கையிலெடுத்திருக்கின்றன. ‘பிரஜ்வல்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மகளிர் அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டம் நடத்தியிருக்கின்றன. மேலும், ‘பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை?’ என்று எதிர்க்கட்சிகள் காட்டமாகக் கேள்வி எழுப்புகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பெண்களின் தாலி குறித்துப் பேசும் பிரதமர் மோடி, ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்துத் தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார். தற்போது, நூற்றுக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தன் கூட்டணிக் கட்சி வேட்பாளர் பிரஜ்வலுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல மத்திய பா.ஜ.க அரசு அனுமதித்திருக்கிறது” என்று கோபமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

‘பிரஜ்வல் ரேவண்ணாவின் செக்ஸ் வீடியோக்கள் பற்றிய தகவல்கள், கடந்த டிசம்பர் மாதமே பா.ஜ.க தலைவர்களுக்குத் தெரியும்’ என்பது இன்னோர் அதிர்ச்சித் தகவல். பிரஜ்வலின் முன்னாள் கார் ஓட்டுநரான கார்த்திக் கவுடாவிடம்தான், பிரஜ்வல் தொடர்பான செக்ஸ் வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் இருந்திருக்கிறது. பிரஜ்வலுடன் ஏற்பட்ட ஒரு பிரச்னையால், அந்த பென் டிரைவை பா.ஜ.க-வைச் சேர்ந்த தேவராஜ் கவுடா என்பவரிடம் கார்த்திக் கவுடா கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருக்கின்றன.

பிரஜ்வலின் பாலியல் வீடியோக்கள் குறித்து, பா.ஜ.க மாநிலத் தலைவர் விஜயேந்திரா எடியூரப்பாவுக்கு கடந்த டிசம்பர் மாதமே பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகியும், வழக்கறிஞருமான தேவராஜ் கவுடா கடிதம் எழுதியிருக்கிறார். கடிதம் எழுதிய விவரத்தை இப்போது தேவராஜ் கவுடா பகிரங்கப்படுத்தியிருக்கிறார். ‘இந்த விவகாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முன்கூட்டியே தெரியும்’ என்கிறார் கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். அமித் ஷாவோ, ‘பிரஜ்வல் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று கர்நாடகா அரசை நோக்கிக் கேள்வியைத் திருப்புகிறார்.

பதிலுக்கு, “எம்.பி-க்களுக்கான சிறப்பு பாஸ்போட்டை பயன்படுத்தியே பிரஜ்வல் ஜெர்மனிக்குத் தப்பிச்சென்றிருக் கிறார். அவரின் சிறப்பு பாஸ்போர்ட்டை ரத்துசெய்து, வெளியுறவுத்துறை மூலம் இந்தியாவுக்கு வரவழைக்க வேண்டும்” என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் சித்தராமையா.

“பிரஜ்வல் தொடர்பான பாலியல் வீடியோக்கள் இருப்பது தெரிந்த பின்னரும், ஜே.டி.எஸ்-ஸுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தது ஏன்… தாய்மார்கள், சகோதரிகளின் தாலி குறித்துத் தேர்தல் பிரசாரத்தில் உணர்ச்சி பொங்கப் பேசிய பிரதமர் மோடி, நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளானது பற்றி இன்னும் வாய் திறக்கவில்லையே ஏன்?” என்று காங்கிரஸும் கேள்வி எழுப்பியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசு, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்திருக்கும் நிலையில், ‘நான் பெங்களூருவில் இல்லாததால் சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராக முடியவில்லை. வாய்மையே வெல்லும்’ என்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பிரஜ்வல் பதிவிட்டிருக்கிறார். வரும் மே 13-ம் தேதி பெங்களூரு திரும்பும் வகையில் அவர் பெயரில் விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருப்பதாகவும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க – ஜே.டி.எஸ் கூட்டணிக்கு இந்த பாலியல் விவகாரம் நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் கர்நாடகா அரசியல் பார்வையாளர்கள்!

Leave A Reply

Your email address will not be published.