மும்பை அணிக்கெதிரான போட்டியில் கல்கட்டா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

ஸ்டார்க், ரசல், நரைன் உள்ளிட்ட பவுலர்கள் கைகொடுக்க கோல்கட்டா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் மும்பை அணி ஏமாற்றியது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கோல்கட்டா அணிக்கு நுவன் துஷாரா தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ பில் சால்ட் (5), ரகுவன்ஷி (13), கேப்டன் ஸ்ரேயாஸ் (6) வெளியேறினர். சுனில் நரைன் (8), ரிங்கு சிங் (9) சோபிக்கவில்லை. பின் இணைந்த வெங்கடேஷ், மணிஷ் பாண்டே ஜோடி கைகொடுத்தது. அபாரமாக ஆடிய வெங்கடேஷ், 36 பந்தில் அரைசதம் எட்டினார். ஆறாவது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது ஹர்திக் பந்தில் மணிஷ் (42) அவுட்டானார். ரசல் (7) ‘ரன்-அவுட்’ ஆனார். பும்ரா ‘வேகத்தில்’ ராமன்தீப் சிங் (2), ஸ்டார்க் (0), வெங்கடேஷ் (70) வெளியேறினர்.

கோல்கட்டா அணி 19.5 ஓவரில் 169 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. மும்பை சார்பில் துஷாரா, பும்ரா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷான் கிஷான் (13), நமன் திர் (11) ஏமாற்றினர். ‘இம்பாக்ட்’ மாற்று வீரராக வந்த ரோகித் சர்மா (11) நிலைக்கவில்லை. திலக் வர்மா (4), நேஹல் வதேரா (6), கேப்டன் ஹர்திக் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். வைபவ் அரோரா வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் அரைசதம் எட்டினார். தனிநபராக போராடிய இவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த டிம் டேவிட் (24), ஸ்டார்க் பந்தில் சரணடைந்தார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் ‘வேகத்தில்’ கோயட்சீ (8), பியுஸ் சாவ்லா (0) வெளியேறினர். மும்பை அணி 18.5 ஓவரில் 145 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பும்ரா (1) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் ஸ்டார்க் 4, ரசல், நரைன், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை கோல்கட்டாவின் வெங்கடேஷ் வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.