`அன்று தோனி இன்று ராகுல்!’ கோயங்காவின் அத்து மீறல் : நடந்தது என்ன ? (வீடியோ)

இந்தியாவுக்காக ஆடி புகழ்பெற்ற ஒரு வீரரை இப்படி நிற்க வைத்து கேமராக்கள் முன்பாக சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்பது அணியின் உத்வேகத்தைதான் குலைக்கும்.

 

ஹைதரபாத் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையேயான போட்டி நேற்று ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்திருந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி ரொம்பவே சுலபமாக வென்றுவிட்டது.

லக்னோ அணி சவாலே அளிக்கவில்லை. இத்தனைக்கும் லக்னோ அணி வென்றே ஆக வேண்டிய போட்டி இது. அப்படியிருந்தும் மோசமாக ஆடியிருக்கிறது.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் வைத்தே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே.எல்.ராகுலிடம் காட்டமாக விவாதித்துக் கொண்டிருந்தார். சோர்ந்து நின்ற கே.எல்.ராகுல் கோயங்காவின் வாதங்களுக்கு பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அணியின் உரிமையாளர் என்பதற்காக திரைமறைவில் பேச வேண்டிய விஷயங்களை பொதுவெளியில் பேசுவது நியாயமாகி விடுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த சஞ்சீவ் கோயங்கா ஏற்கனவே கொஞ்சம் சர்ச்சையான நபர்தான். சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் இரண்டு ஆண்டுகால தடையில் இருந்தபோது வந்த இரண்டு புது அணிகளில் இந்த கோயங்காவின் புனே அணியும் ஒன்று. தோனியை தன் அணிக்குள் இழுத்து முதல் சீசனிலேயே கேப்டன் பொறுப்பை கொடுத்தார். ஆனால், அந்த சீசனில் புனே அணி மோசமாக ப்ளே ஆப்ஸூக்கு கூட தகுதிப்பெறாமல் இருந்திருக்கும். அணியின் முடிவை பார்த்து அதிருப்தியடைந்த கோயங்கா அடுத்த சீசனிலேயே தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கினார். அத்தோடு நில்லாமல் கோயங்காவுக்கு நெருக்கமானவர்கள் தோனியை வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

எம்.எஸ்.தோனி

கோயாங்காவுமே தோனி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அப்போது செய்திகளெல்லாம் வெளியாகியிருந்தன. ஆக, இந்த கோயங்கா தோனி மாதிரியான மாபெரும் வீரரையே இப்படித்தான் கையாண்டிருக்கிறார். அப்படியிருக்க கே.எல்.ராகுலிடம் களத்தில் அத்தனை கேமராக்கள் முன்பாக காட்டமாக பேசியதில் எந்த ஆச்சர்யமுமில்லை. ஆனால், இது சரியான அணுகுமுறையா என்பதுதான் இப்போதைய கேள்வி.

ஒரு அணியின் உரிமையாளராக அணியின் செயல்பாடுகள் குறித்து அணியின் கேப்டனுடன் விவாதிக்க அத்தனை உரிமையும் இருக்கிறது. ஆனால், அது திரைமறைவில் நடக்க வேண்டும். இந்தியாவுக்காக ஆடி புகழ்பெற்ற ஒரு வீரரை இப்படி நிற்க வைத்து கேமராக்கள் முன்பாக சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி கேட்பது அணியின் உத்வேகத்தைதான் குலைக்கும். மேலும், உரிமையாளர்கள் அணிக்குள் எது வரை தங்கள் எல்லை என்பதையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு எல்லையை மீறி அணியின் முடிவுகளில் தலையீடு செய்த உரிமையாளர்களால் அணிக்கு கேடாகத்தான் முடிந்திருக்கிறது. சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டேவிட் வார்னர் போன்ற ஒரு வீரரை கேப்டனாக வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்து ஒருகட்டத்தில் அவரையே அணியிலிருந்து நீக்கினார்கள். வார்னரை சமூகவலைதள பக்கங்களில் ப்ளாக்கும் செய்தனர். அது ஒரு விசித்திரமான நடவடிக்கை என வார்னர் இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறார்.

தொடர் தோல்விகளை தாங்க முடியாமல் வார்னரை தண்ணீர் கேன் தூக்கவிட்டதால் சன்ரைசர்ஸூக்கு அப்படி என்ன நன்மை விளைந்துவிட்டது? ஒன்றுமே இல்லை. அணியின் உத்வேகம் மேலும் பாதிக்கப்பட்டது. மேலும் தோல்விகள் துரத்தின. சில வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அவர்கள் ஃபார்முக்கே வந்திருக்கின்றனர். இன்னொரு உதாரணம் மும்பை இந்தியன்ஸ் அணி. வருங்காலத்திற்கான திட்டம் என நினைத்து ஹர்திக் பாண்ட்யாவை வணிக நோக்கத்தில் மட்டுமே வாங்கியதால் அந்த அணி இப்போது அதளபாதாளத்தில் கிடக்கிறது.

KL Rahul: `அன்று தோனி இன்று ராகுல்!' தொடரும் சஞ்சீவ் கோயங்காவின் அத்து மீறல் - என்ன நடந்தது?

ஆக, அணியின் உரிமையாளர்கள் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் சுயாதீன அதிகாரத்தை கொடுக்கும்போதுதான் இங்கே எதிர்பார்க்கிற முடிவுகள் கிடைக்கும். சுதந்திரத்தை தாண்டி தாங்கள் தேர்வு செய்திருக்கும் வீரர்கள் மீதும் பயிற்சியாளர்கள் மீதும் ஒரு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படியிருக்கும்பட்சத்தில்தான் நீண்டகால அடிப்படையில் ஒரு அணி வெற்றிநடை போட முடியும். கோயங்கா போன்றவர்கள் இந்த விஷயத்தில்தான் சறுக்குகிறார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.