87 ஸ்ட்ரைக் ரேட்டில் லக்னோவிற்கு குழி தோண்டிய ராகுல்!

நகைச்சுவை என்னவெனில் சன்ரைசர்ஸ் ஓவருக்கு 16 ரன்களுக்கு மேல் அடித்த பிட்ச்சில்தான் கே.எல்.ராகுல் மாதிரியான பேட்டர் 87 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி தனது அணியின் மீது தானே மண்ணை அள்ளி வீசியிருக்கிறார்.

‘இப்படியொரு அடியை நாங்கள் டிவியில்தான் பார்த்திருக்கிறோம்.’ என சன்ரைசர்ஸ் அணியை பார்த்து புலம்பி தள்ளியிருக்கிறார் கே.எல்.ராகுல். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியை எளிதில் இழந்திருக்கிறது லக்னோ.

சன்ரைசர்ஸ் அணி லக்னோவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. லக்னோ நிர்ணயித்த 165 ரன்கள் டார்கெட்டை வெறுமென 9.4 ஓவர்களிலேயே எட்டி முடித்திருக்கிறது. மரண அடி. ஹெட்டும் அபிஷேக்கும் மட்டுமே நின்று பிரித்து மேய்ந்துவிட்டார்கள்.

நகைச்சுவை என்னவெனில் இவர்கள் ஓவருக்கு 16 ரன்களுக்கு மேல் அடித்த பிட்ச்சில்தான் கே.எல்.ராகுல் மாதிரியான பேட்டர் 87 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி தனது அணியின் மீது தானே மண்ணை அள்ளி வீசியிருக்கிறார். தோல்வி கூட பரவாயில்லை. ஆனால், இந்தத் தோல்வி லக்னோ அணியின் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பையும் கடுமையாக பாதித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் பொறுப்பாக ஆடுகிறேன் என்ற பெயரில் கேப்டன் கே.எல்.ராகுலே லக்னோ அணிக்குக் குழி தோண்டியிருக்கிறார்.

‘லக்னோ அணி இன்னமும் பழமையான முறையிலேயே ஆடி வருகிறது.’ என மைக் ஹெசன் இந்தப் போட்டிக்கு பிறகு பேசியிருந்தார். லக்னோ அணி என்பதை விட கே.எல்.ராகுல் என கூறலாம். ஏனெனில், அவர்தான் ஒரு 10 ஆண்டுகளுக்குப் பின் நின்று கொண்டு நிகழ்கால டி20 யை ஆடிக்கொண்டிருக்கிறார். ஐ.பி.எல். தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. லக்னோ ஆடும் போட்டிகளையெல்லாம் வெல்ல வேண்டும் என்கிற சூழலில் இருக்கிறது. இந்த சமயத்தில் ராகுல் இப்படி மந்தமாக ஆடி சொதப்புவதுதான் பிரச்சனை. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் லக்னோவுக்கு டார்கெட் 236. இமாலய டார்கெட். விடாப்பிடியாக போராடி சேஸிங்கை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் அல்லது முடிந்தவரை போராடி ரன்ரேட்டை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இதற்கான டோனை ஓப்பனர்கள்தான் செட் செய்ய வேண்டும். லக்னோ அணியின் கேப்டன் மற்றும் அனுபவமிக்க ஓப்பனரான கே.எல்.ராகுல் 21 பந்துகளில் 25 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 119 மட்டுமே.

‘நீங்கள் 236 ரன்களை சேஸ் செய்யும் போது ஒரே ஒரு பேட்டர் மட்டும் 21 பந்துகளில் 25 ரன்களை அடிக்கிறார். எனில், மீதமுள்ள பேட்டர்கள் 99 பந்துகளில் 211 ரன்களை எடுக்க வேண்டுமா?’ என மைக் ஹெசன் கேள்வி கேட்டிருந்தார்.

நியாயமான கேள்வி இது. ஒன்று அதிரடியாக ஆட வேண்டும் அல்லது நின்று ஆடினால் நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் பெரிய இன்னிங்ஸாக முடிக்க வேண்டும். இது இரண்டிலுமே கே.எல்.ராகுல் கடந்த இரண்டு போட்டிகளிலுமே தவறியிருந்தார். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். விக்கெட்டெல்லாம் விழுந்தது என சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால், நடப்பு ட்ரெண்ட்டில் 87 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதற்கெல்லாம் எந்த நியாயமும் கற்பிக்க முடியாது. பொறுப்பாக ஆடுகிறேன் என்ற பெயரில் கையை கட்டிக்கொண்டு ஆடியிருக்கிறார்.

இவர் ஆடிய விதம் ஒட்டுமொத்த அணிக்குமே தவறான அபிப்ராயத்தை கொடுத்திருக்கும். மனரீதியாகவே இது மெதுவான பிட்ச் என்கிற எண்ணத்தை கொடுத்திருக்கும். சன்ரைசர்ஸ் அணியின் சுதந்திர மனநிலையையும் அதிரடியையும் உச்சிமுகர்ந்து பாராட்டும் கே.எல்.ராகுலுக்கு இதெல்லாம் தெரியவில்லை என்பதே ஆச்சர்யம்தான்.

‘ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் ஓவர் ரேட்டட்’ என்கிற மனநிலை உடையவர் கே.எல்.ராகுல். அவரை பொறுத்தவரைக்கும் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். நின்று சதமடிக்க வேண்டும். அதுவே அவருக்கு சாதனை. ஆனால், இந்த அணுகுமுறை இப்போது ட்ரெண்ட்டிலேயே இல்லை. ஒரு வீரர் கூட சதமடிக்காமல் அணி 300 ஐ நெருங்கும் சூழலெல்லாம் வந்துவிட்டது. 30-40 ரன்களை வேகமாக நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி கொடுத்துவிட்டாலே போதும். அவ்வளவுதான் அணிகளின் எதிர்பார்ப்பு.

கே.எல்.ராகுலுக்கு இந்த பாணியெல்லாம் செட்டே ஆகவில்லை. இந்த சீசனில் 12 போட்டிகளில் ஆடியிருக்கும் கே.எல்.ராகுல் 4 போட்டிகளில் மட்டுமே 150 அல்லது அதற்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். மற்ற போட்டிகளிலெல்லாம் ஸ்ட்ரைக் ரேட் கொஞ்சம் அடி வாங்கியிருக்கவே செய்கிறது. ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனை காலம் காலமாகவே கே.எல்.ராகுலை பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஆனால், அவர்தான் அதற்கெல்லாம் முகம் கொடுக்க தயாராகவே இல்லை. வெளியே சொல்லப்படாவிட்டாலும் கே.எல்.ராகுல் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படாததற்குமே அவரின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்னை மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும். இந்த பிரச்சனை தனிப்பட்ட கே.எல்.ராகுலுக்கு சிரமத்தை கொடுப்பதை விட அவர் ஆடும் அணிக்கு அதிக சிரமத்தை கொடுக்கிறது. அதற்காகவாது கே.எல்.ராகுல் தன்னுடைய ஆட்டத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

உ.ஸ்ரீ

Leave A Reply

Your email address will not be published.