ஊழியர்கள் மருத்துவ விடுப்பு: ஏர்இந்தியா விமான சேவைகள் ரத்து.

புதன்கிழமையன்று (மே 8) 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமானச் சேவை பெரும் பாதிப்புக்குள்ளானது.

போதுமான ஊழியர்கள் இல்லாததால் 78 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உள்நாட்டு விமானச் சேவைகளுடன் வெளிநாட்டு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயணச்சீட்டுக்கான பணம் முழுமையாகத் திருப்பிக்கொடுக்கப்படும் என்றும் பயணிகள் அவர்களுக்கு ஏற்றவாறு மறுபயணத்திற்கான பயணச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

டாடா குழுமம் 2022ஆம் ஆண்டு இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இந்த நடவடிக்கையின் போது ஏற்கெனவே பணியில் இருந்த ஊழியர்களுக்கும் புதிய ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நேர்காணலில் நன்றாக செயல்பட்டபோதும் குறைவான நிலையில் ஊதியம் உள்ள பணியில் அமர்த்தப்படுவதாகவும், போனஸ் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானமும் தாமதமானதால் அதில் செல்லவிருந்த 183 பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். விமானப் புறப்பாடு மூன்று மணி நேரத்துக்கும் மேல் தாமதமானதால் பயணிகளுக்கும் ஏர் இ்ந்தியா ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.