எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான கட்டணம் குறித்து மகன் விளக்கம்.

காலஞ்சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண் விளக்கமளித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் திகதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, எஸ்.பி.பி.யின் சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பணம் அறவிட்டதாகவும் இதனைக் கட்டுவதற்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினரால் முடியாத சூழல் ஏற்பட்டதாகவம் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அதன் பின்னர் எஸ்.பி.பி.யின் மகன் குடியரசுத் துணைத் தலைவரை அணுகிய பின்னரே, மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி.யின் உடலை வழங்கியது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்து எஸ்.பி.பி.சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் காணொலியொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொலியில், “அப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார். மருத்துவமனையில் மொத்தமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்து வதந்தி பரவி இருக்கிறது.

நாங்கள் ஏதோ பணம் கட்டியதாகவும் ஆனால் இன்னும் பணம் பாக்கி இருந்ததாகவும் பின்னர் தமிழக அரசிடம் அதற்காகக் கோரியதாகவும் அவர்கள் மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவரிடம் நான் கோரிக்கை வைத்ததாகவும் ஒரு செய்தி உலாவுகிறது.

மேலும் நாங்கள் பாக்கி பணத்தை தரும் வரை அப்பாவின் உடலை எம்ஜிஎம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இவை அனைத்தும் பொய்.

இதுபோன்ற வதந்திகளைத் தெளிவுபடுத்த நானும் மருத்துவமனைத் தரப்பும் சேர்ந்து ஒரு செய்தி அறிக்கையைத் தரப்போகிறோம்.

இப்படி ஒரு விடயத்தை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதே வருத்தத்தைத் தருகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் செய்த அத்தனை சிகிச்சைகளுக்கும் எங்கள் குடும்பத்துக்குச் செய்த உதவிகளுக்கும் எங்கள் குடும்பம் என்றும் நன்றியுடன் இருப்போம்.

மருத்துவமனைக்குச் செல்வது போலவே இல்லை. வீட்டுக்குச் சென்றுவருவது போலத்தான் இருந்தது. மருத்துவமனைக்குச் சென்றது, மருத்துவர்களைச் சந்தித்தது, அப்பாவைப் பார்த்துக்கொண்ட செவிலியர்களைச் சந்தித்தது என அத்தனையையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியாகும்.

ஆனால் அதுவரை தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். நீங்கள் எவ்வளவு பேரைக் காயப்படுத்துகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

அப்பாவுக்கான சிகிச்சைக்கு ஒரு கருவி தேவைப்பட்டபோது எம்ஜிஎம் தரப்பு அப்போலோ மருத்துவமனையைக் கேட்டது. அவர்கள் உடனடியாகத் தந்து உதவினார்கள்” என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.