10-ம் வகுப்பில் 623 மதிப்பெண் – நீதிமன்ற ஊழியருக்கு எழுத,படிக்க தெரியாததால் அதிர்ந்த நீதிபதி!

நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு எழுத, படிக்க தெரியாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகரே (23). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கொப்பல் நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அந்த நீதிமன்றத்தில்10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது, தான் 10-வது படித்து முடித்ததாக கூறி பிரபு லட்சுமிகாந்த் லோகரே தனது மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தார். அதில், 625 மதிப்பெண்களுக்கு 623 மதிப்பெண் (99.5 சதவீதம்) அவர் பெற்றதாக இடம்பெற்றிருந்தது.

இதனடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்த நீதிமன்றத்திலேயே அவருக்கு ஊழியராக வேலை கிடைத்தது. இந்நிலையில் பிரபுலட்சுமிகாந்த் லோகரே படிப்பதற்கும், எழுதுவதற்கும் திணறியுள்ளார். இது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து அவரை அழைத்து நீதிபதி முன்பு வாசிக்க வைத்தபோதும் அவர் திணறினார். இதனை தொடர்ந்து அவரின் கல்வி சான்றை பார்த்தபோது, 7-ம் வகுப்பிலிருந்து அவர் நேரடியாக 10-ம் வகுப்பிற்கு தேர்வு எழுதியதும், அதில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது.

ஆனாலும், அவருக்கு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படிக்கவோ, எழுதவோ தெரியவில்லை. இதனால் அவரது கல்விச் சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். இதனடிப்படையில் பிரபு லட்சுமிகாந்த் லோகரேவின் கையெழுத்தையும், 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் உள்ள அவரது கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, தான் 2017, 2018-ம் ஆண்டில் ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் பிரபு லட்சுமிகாந்த் லோகரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.