உலக மக்களின் கவனம் ராஃபாவின் பக்கம்.

இஸ்‌ரேலியத் தாக்குதலால் காஸா நிலைகுலைந்துள்ளது. மில்லியன்கணக்கான பாலஸ்தீன அகதிகள் காஸாவின் தென்பகுதியில் உள்ள ராஃபா நகரில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்‌ரேல் அங்கு தாக்குதல் நடத்தினால் உயிர்ச்சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்தும் இஸ்‌ரேல் அங்கு தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது.

அண்மையில், இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராஃபா அகதிகள் முகாமில் குறைந்தது 45 பேர் மாண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள், முதியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, சமூக ஊடகத்தில் ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ (அனைவரின் கண்களும் ராஃபாவை நோக்கி இருக்கின்றன) என்ற வாசகம் வலம் வருகிறது.

இதை மில்லியன்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதன்மூலம் பாலஸ்தீன அகதிகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்த இயக்கத்தை மனிதாபிமான ஆர்வலர்களுடன் சேர்ந்து பல அமைப்புகளும் தொடங்கிவைத்தன.

ராஃபாவில் உள்ள அகதிகளின் அவலநிலை உலக மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகதிகள் கூடாரங்களின் படங்களைப் பயன்படுத்தி ‘ஆல் ஐஸ் ஆன் ராஃபா’ எனும் வாசகம் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதாபிமானம் தொடர்பான படங்கள் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.