யாழில் படையினருக்குத் தனியார் காணிகளைச் சுவீகரிக்க அளவீடு செய்யக்கூடாது! – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் காணிகளைப் படைத் தரப்புக்கு வழங்குவதற்கு அளவீடு செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்படி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழிமொழிந்தார். அதையடுத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“யாழ். சுழிபுரத்தில் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காகத் தனியார் காணிகளை நில அளவைத் திணைக்களத்தினர் அளவீடு செய்ய முயன்றதால் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதையடுத்து காணி அளவீடு இடைநிறுத்தப்பட்டது. எனவே, இனி வரும் காலத்தில் படையினருக்காக நிலம் சுவீகரிப்பதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் தனியார் காணிகளை அளவீடு செய்ய முயல்வதனை நிறுத்த வேண்டும்” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்படி கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், “படையினருக்கு நிலத்தை சுவீகரிக்க அளவீடு செய்து தருமாறு பிரதேச செயலாளர்கள் எமக்குக் கடிதம் அனுப்பிவிட்டு அதனைப் படையினருக்கும் தெரியப்படுத்துகின்றனர். அதனால் படையினர் எமது அலுவலகத்துக்கு வருகை தந்து அளவீடு செய்து தருமாறு கோருவதனாலேயே நாம் செல்கின்றோம். பிரதேச செயலாளர்கள் கடிதம் அனுப்பினால் அதனை நாம் அளவீடு செய்ய வேண்டியது கட்டாயம். எனவே, எமக்குக் கடிதம் அனுப்ப வேண்டாம் எனப் பிரதேச செயலாளர்களை அறிவுறுத்துங்கள்.” – என்று நில அளவைத் திணைக்கள அதிகாரி தர்மபாலன் தெரிவித்தார்.

இதன்போது தனியார் காணிகளைப் படைத் தரப்புக்கு வழங்குவதற்கு அளவீடு செய்யக்கூடாது என்ற தீர்மானத்தை சிறீதரன் எம்.பி. முன்மொழிய அதனை அங்கஜன் எம்.பி. வழிமொழிந்தார். அதையடுத்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.