டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா.

ஆமை வேகத்தில் ஆடிய இலங்கை அணி 77 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி அந்த இலக்கை 16.2 ஓவர்களில் எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி 100 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்திருக்கும் என்ற அளவில் தான் இந்தப் போட்டியின் முடிவு இருந்தது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் “டி” பிரிவில் இலங்கை – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன போட்டி நடைபெற்றது. நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான பிட்ச் மிக மோசமாக இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணி முதலில் பேட்டி தேர்வு செய்தது.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்தனர். பிட்ச் குறித்து இலங்கை வீரர்களால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டுமே 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டார். மற்ற எந்த வீரரும் நூறு ஸ்ட்ரைக் ரேட்டை ஒட்டி ரன் சேர்க்கவில்லை.

இந்த நிலையில் இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் ரபாடா 2 விக்கெட்கள், பார்ட்மேன் 1, கேசவ் மகாராஜ் 2, அன்ரிச் நோர்ஜே 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து 78 ரன்கள் என்ற மிகச் சிறிய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்தது. அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட தென்னாப்பிரிக்கா இந்த இலக்கை 10 ஓவர்களில் எட்டி விடும் என அனைவரும் நினைத்த நிலையில் அந்த அணியின் வீரர்களும் பேட்டிங் செய்ய முடியாமல் திணறினர். ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்களிலும், மார்கிரம் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டி காக் மற்றும் ஸ்டப்ஸ் மிக நிதானமாக ரன் சேர்த்தனர்.

டீ காக் 27 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். ஸ்டப்ஸ் டெஸ்ட் போட்டி போலவே ஆடி 28 பந்துகளில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி மன்னன் கிளாசனும் எதிர்பாராத விதமாக நிதானமாகவே ஆடினார். பின்னர் 16.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது தென்னாப்பிரிக்கா. 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

Leave A Reply

Your email address will not be published.