இந்திய மீனவர்களின் அத்துமீறலை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது! – அமைச்சர் திட்டவட்டம்.

“எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.”

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்திய மீனவர் விவகாரம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அவ்வாறு அத்துமீறல்கள் இனிமேல் நடக்காது என்று இப்போது என்னால் உறுதியாகச் சொல்லவும் முடியாது.

ஆனால், இதனை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்ற அரசினுடைய கொள்கையும் இதில் விசேடமாக கடல் தொழில் அமைச்சருடைய எண்ணமும் எல்லோருக்கும் தெரியும்.

அந்தவகையில் இந்திய இழுவைப் படகுகளில் அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது

அதனை இராஜதந்திர ரீதியாக மட்டுமன்றி சட்ட ரீதியாகவும் எதிர்கொண்டு தடுக்கத் தயாராக இருக்கின்றோம். அதற்கான முனைப்புகளிலேயே தற்போதும் ஈடுபட்டு வருகின்றோம்.

எமது ஜனாதிபதி இந்தியா சென்றபோது இரு நாட்டு மீனவர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளார். அதேபோல் இந்திய வெளிவிவகார அமைச்சருடனும் பேசியிருக்கிறார்.

வடக்கு மாகாண மீனவர்களுடைய இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.

நான் அரசியலுக்காக எதையும் பேசுவதில்லை. மக்கள் நலன் சார்ந்தே என்னுடைய செற்பாடுகள் அமையும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.