டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது. ‘சூப்பர் 8’ குரூப் 2 போட்டியில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இங்கிலாந்து.

மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. அமெரிக்கா 18.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் நிதிஷ் குமார் 30, கோரி ஆண்டர்சன் 29, ஹர்மீத் சிங் 21 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் அதில் ரஷித் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஒரே ஓவரில் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் கிறிஸ் ஜார்டன். சாம் கரன் 2, லிவிங்ஸ்டன் மற்றும் ரீஸ் டாப்ளி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் சால்ட் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். பட்லர் இதில் அதிரடியாக ஆடி அசத்தினார். 38 பந்துகளில் 83 ரன்களை அவர் குவித்தார். 6 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இதில் ஹர்மீத் வீசிய ஒரு ஓவரில் 5 சிக்ஸர்களை பட்லர் பறக்க விட்டார். 21 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார் சால்ட். 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து அசத்தியது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் விருதை அதில் ரஷித் வென்றார்.

சூப்பர் 8’ குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில் 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. நாளை (ஜூன் 24) காலை நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

Leave A Reply

Your email address will not be published.