வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அடாவடி : விவசாயிகள் 12 பேர் கைது

சொந்த நிலத்தில் நெற்செய்கையில்
ஈடுபட்ட விவசாயிகள் 12 பேர் கைது!

இயக்கச்சிக் கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த 12 விவசாயிகளைச் சுண்டிக்குளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி வயல் விதைப்பில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தி இன்று கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், அவர்கள் பாவித்த உபகரணங்கள், தொலைபேசிகளையும் பறிமுதல் செய்து அவர்களை அறிவியல் நகர்ப் பகுதியிலுள்ள அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்

மாலை வரை அவர்கள் விடுதலை செய்யப்படவும் இல்லை; பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவும் இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள பிரதான அலுவலகத்துக்குச் சென்றபோது கைதுசெய்யப்பட்டவர்கள் அலுவலகத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்

இவர்களின் கைது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது அதற்குப் பதிலளிக்கக் கூடியவாறான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கவில்லை. அங்கிருந்த தமிழ்பேசும் அதிகாரிகளிடம் வினவியபோது அதற்கான பதிலைத் தர மறுத்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினருடன் அநாகரிகமான முறையில் நடந்தும் கொண்டனர்

இந்தநிலையில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது இவர்கள் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை.

இதன்பின்னர், “அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இவ்விடத்தை விட்டுச் செல்ல முடியாது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அலுவலக வாயிலில் அமர்ந்ததன் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12 பேரையும், அவர்களது உடமைகளையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மாலை 6 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முற்படுத்தியிருந்தனர்.

12 பேரும் நாளை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.