ஒற்றையாட்சி தீர்வை உதறினால் செவ்வாய்க்கிரகம் செல்லுங்கள்.

ஒற்றையாட்சி தீர்வை உதறினால்
செவ்வாய்க்கிரகம் செல்லுங்கள்!

– தமிழர்களுக்கு இதுதான் வழி என்கிறது ராஜபக்ச அரசு

“தமிழர்கள் அரசை மதித்து – அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும். ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும்.”

– இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் அரசமைப்பை மதித்து – அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது.

படையினரின் தியாகத்தால் ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தமிழர்கள் நிம்மதியாக வாழும் நிலையை ஏற்படுத்தினோம். ஆனால், அவர்கள் திரும்பவும் பழைய நிலைக்கே செல்ல முற்படுகின்றார்கள்.

ஆயுதப் போராட்டக் காலத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர அனுமதி கேட்டு வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலைத் தமிழர்கள் அனுஷ்டித்துள்ளார்கள். போதாக்குறைக்கு இந்து ஆலயம் முன் உண்ணாவிரதமும் இருந்துள்ளார்கள்.

அரசையும் சிங்கள மக்களையும் சீற்றமடையைச் செய்யும் வகையில் தமது நடவடிக்கைகளைத் தமிழர்கள் முன்னெடுக்கின்றார்கள். நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் அவர்கள் நிற்கின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து – அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும். ஆனால், அந்தத் தீர்வு ஒற்றையாட்சித் தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க் கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வைக் கேட்க வேண்டி வரும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.