ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்   -விசேட அறிவித்தல்!

COVID-19  பரவலிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்  இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசேட அறிவித்தல்!

இதுவரை காலமும் எமது மிகச் சிறந்த செயற்பாடுகள் காரணமாக நாம், நமது குடும்பம் மற்றும் நமது நாடு முழுவதும் உயிர்கொல்லி நோயான  COVID-19  வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டோம்.

இருப்பினும் இக்கொடிய  COVID-19  வைரஸ் தாக்கம் மீண்டும் தற்போது எமது நாட்டினை சவாலுக்குள்ளாக்கியுள்ளது. எனவே இதுவரைகாலமும் உலகில் பத்து இலட்சம் உயிர்களுக்கு மேல் காவு கொண்ட கொடிய  COVID-19  வைரஸ் பரவலிலிருந்து நாமும் நமது அன்புக்குரியவர்களும் பாதுகாப்பாயிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தவகையில், மிக அவசியமான காரணங்களுக்காக அன்றி வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்வதுடன்; பொதுமக்கள் சன நெரிசலான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மிக அவசியமான காரணம் ஒன்றுக்காக வெளியில் செல்லவேண்டிய தேவை ஏற்படின், மிகக் கட்டாயமாக முகக்கவசம் அணிவதோடு, அவ்வாறான இடங்களில் ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவேண்டியதும் அவசியமானதாகும்.

அத்துடன் வெளியில் சென்று வேலைகளை முடித்துவிட்டு வீட்டை அடைந்தவுடன் உள்ளே நுழையாது, நீராடி முடித்த பின்னரே வீட்டுக்குள் நுழையவேண்டும். மேலும்; தங்களது ஆடைகளைப் பொருத்தமான முறையில் அகற்றி, அவற்றையும் சவர்க்காரமிட்டுக் கழுவிய பின்னர் நன்றாக வெயிலில் உலரவிட வேண்டும்.

மிக அவசியமாக, தங்களது கைகளைத் தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி அடிக்கடி கழுவுவதன் மூலமும், எமது மூக்கு, வாய், கண் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்ப்பதன் மூலமும் இக்கொடிய COVID-19  வைரஸ் கிருமி எமது உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம்.

இதேநேரம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் நோய்த்தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எம்மையும் எமது அன்புக்குரியவர்களுக்கும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இக்கொடிய  COVID-19  வைரஸ் கிருமிப் பரவலிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.