ஊடகவியலாளர் பாதுகாப்பை  உறுதிப்படுத்தவேண்டும் அரசு கண்டன அறிக்கையில் தமிழரசுக் கட்சி.

ஊடகவியலாளர் பாதுகாப்பை 
உறுதிப்படுத்தவேண்டும் அரசு
கண்டன அறிக்கையில் தமிழரசுக் கட்சி வலியுறுத்து .

“ஊடகவியலாளரதும், ஊடகத்துறையினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவில் இரு ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்து இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,:-

“முல்லைத்தீவு முறிப்புப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத மரம் வெட்டுதல், மரங்கடத்தல், காடழிப்பு முறைப்பாடுகளை அரசும், வனவளத் திணைக்களமும் தடுக்கத் தவறி வந்திருக்கின்றது.

மக்களின் முறைப்பாடுகள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய கொள்ளை முயற்சிகள் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றன என்று செய்திகள் வருகின்றன.

இதனால் அப்பிரதேசங்களுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன், சண்முகம் தவசீலன் ஆகியோர் சட்டவிரோதிகளால் – கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மட்டுமல்ல ஏனைய ஊடகவியலாளரதும், ஊடகத்துறையினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடன் கைது செய்யப்பட்டுத் தண்டனை வழங்க வேண்டும் எனவும் வற்புறுத்துகின்றோம்.

அத்தோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணமும், இழப்பீடும், நியாயமும் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசை வற்புறுத்துகிறோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.