கைதாவதைத் தடை செய்யக்கோரி நீதிமன்றில் ரிஷாத் இன்று ரிட் மனு.

கைதாவதைத் தடை செய்யக்கோரி
நீதிமன்றில் ரிஷாத் இன்று ரிட் மனு

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில் அவரது சட்டத்தரணியால் குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியமை, அதற்காக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத்  பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்றத் திட்டப் பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்றத் திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இவர்களில் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதிவானினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ரிஷாத் பதியுதீன் மற்றும் சம்சுதீன் மொஹமட் யாசீனுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசுக்குச் சொந்தமான ரூபா 95 இலட்சத்துக்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்பத்தியதற்கு அமைய, பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.